நாகர்கோவில்: கன்னியாகுமரி- சென்னை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்து உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் காத்திருப்பு பட்டியல் அதிகமாகவே இருக்கிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களிலும் கூட கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதுடன் தற்போது இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரும் இருப்பு பாதையாக விளங்கும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க இதுவரை எந்த ஒரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை. சென்னை எழும்பூர் மதுரை- நாகர்கோவில் – திருவனந்தபுரம் 805 கிலோ மீட்டர் மெயின் லைனில் முக்கிய சிக்னல் மேம்பாடு பணிகள், அதிவேக பாதை அமைத்தல் திட்டங்கள் என்பது இதுவரை எட்டா கனியாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கான மேம்பாடு கூடுதலாக கிடைக்கும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
ரயில்வே துறை திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதிகட்ட ஆய்வுக்கு கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இந்த திட்டம் மிக, மிக முக்கியமாக விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்திற்காக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்து திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை வீராணி ஆளூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரை உள்ள இருப்பு பாதை திட்டத்தை மாற்றுப்பாதையில் அதாவது ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக சுசீந்திரம் ரயில் நிலையத்தில் வந்து சேருமாறு அமைக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கேரள அரசு அங்கமாலி- எரிமேலி சபரி வழித்தடத்தை பாலராமபுரம் வழியாக விழிஞ்ஞம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரயில் திட்டம் எருமேலியில் இருந்து பத்தனம்திட்டா, பத்தனாபுரம், புனலூர், கிளிமானூர், வெஞ்சாரமூடு, நெடுமங்காடு, காட்டாக்கடை, பாலராமபுரம் வழியாக விழிஞ்ஞம் வரை நீட்டிக்கப்படும். இந்த பாதை கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காட்டாகடைக்கும், வெள்ளரடைக்கும் இடைப்பட்ட இடம் வழியான பாலராமபுரம் செல்ல இருக்கிறது. இவ்வாறு வரும் இருப்பு பாதையை குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோரம் வெள்ளறடா, நெட்டா, சிற்றார் அணை, குலசேகரம் அவுட்டர், களியல், பொன்மனை அவுட்டர், சுருளகோடு, தடிக்காரகோணம், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, செண்பகராமன் புதூர் வழியாக ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கொண்டு இணைக்க வேண்டும்.அதற்கான பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.திருநெல்வேலி மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும். இதற்காக சர்வே வருகின்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நகரங்களில் வாழும் மக்களின் போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதன்படி மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ ஆகிய சேவைகள் 2ம் நிலை நகரங்களிலும், முதல் நிலை நகரங்கள் புறநகர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் மாநகரமானது சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதி ஆகும். அதனால் தான் நாகர்கோவிலை மாநகராட்சியாக அரசு அறிவித்தது. நகரில் தற்போது வாகனங்கள் இரட்டிப்பாகி, போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகமாகி வருகிறது.ஆகவே நாகர்கோவில் மாநகரில் நியோ மெட்ரோ அமைக்க சாத்தியக்கூறுகள் அறிக்கை தயார் செய்ய பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உண்டா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் தற்போது மின்சார இஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்காளத்தில் சித்தரஞ்சன் இஞ்சின் தொழிற்சாலையும், டீசல் இஞ்சின் தொழிற்சாலை வாரணாசியில் உள்ளது. நாங்குநேரி அருகே மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் மெமு ரயில் இஞ்சின் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும்.நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடைமேடை 4 மற்றும் 5 அமைத்து நான்கு வழிச்சாலைக்கு இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது பாதை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை சர்வே செய்யப்பட்டது. இந்த திட்டம் சர்வே மேம்படுத்துதல், குழித்துறை ரயில் நிலையத்தில் விழிஞ்ஞம் சரக்கு துறைமுகத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
