×

3 மாவட்ட பாசனத்துக்கு சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து 3 மாவட்டங்களுக்கு தேவையான விவசாய பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு தற்போது 7,186 மி.கன அடி இருப்பு உள்ளது. எனவே, அணையில் இருந்து நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, இன்று சாத்தனூர் அணையின் பிக்கப் டேம் பகுதியில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, உதயசூரியன், டிஆர்ஓ ராமபிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ராஜாராமன், சந்தோஷ், ராஜேஷ், உதவி பொறியாளர் செல்வபிரியன், ஒன்றிய திமுக செயலாளர்கள் பன்னீர்செல்வம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கோவிந்தன், தாசில்தார் துரைராஜ், பிடிஓ பழனி, பாசன சங்க தலைவர்கள் ஜெயராமன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனவசதி பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Sathanur dam ,Minister ,E.V.Velu ,Tiruvannamalai ,Thenpennai river ,Tiruvannamalai district ,
× RELATED தி.மலையில் நாளை பவுர்ணமி கிரிவலம்...