திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, நாளை முதல் பக்தர்களின் வசதிக்காக மலைக்கோயிலுக்கு 15 இலவச பேருந்து சேவைகள் துவங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில், பக்தர்களின் கூட்டத்துக்கேற்ப கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிக் தெரிவித்தனர்.
திருத்தணியில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் கோயிலில் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, நாளை முதல் தைப்பூச விழா நிறைவு பெறும்வரை, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு வரை 15 இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 2 பேருந்துகள், தணிகை இல்லத்திலிருந்து 4 பேருந்துகள், அரக்கோணம் சாலையில் மலையடிவாரத்தில் இருந்து 9 பேருந்துகள் என மொத்தம் 15 இலவச பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணிகள் இலவசமாக பயணம் செய்து சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மலைக்கோயிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தின்கீழ் வாகன நிறுத்துமிடம், அன்னதான கூடம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மலைக்கோயிலில் இடநெருக்கடி இருப்பதால், அங்கு அதிகபட்சமாக 250 கார்கள் மட்டுமே நிறுத்த முடியும். இதையடுத்து மலைக்கோயிலில் இடவசதிக்கேற்ப கார்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். அதேபோல் இடவசதிக்கேற்ப மலைக்கோயிலுக்கு இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
குறிப்பாக, மலைக்கோயிலில் போக்குவரத்து நெரிசல் தடுக்கும் வகையில், ஆட்டோக்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பக்தர்கள் தடையின்றி விரைவில் சாமி தரிசனம் ஏதுவாக கூடுதலாக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று திருத்தணி கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
