×

தி.மலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலையாருக்கு தை பூசம் தீர்த்தவாரி; பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை அமைந்துள்ளது. மேலும், தை பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், சமீப காலமாக கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (1ம் தேதி) காலை 6.13 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் (2ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே, நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பவுர்ணமி நாளில் தை பூசமும் அமைந்திருப்பது சிறப்பாகும். அதையொட்டி, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசான்ய குளத்தில் தை பூச தீர்த்தவாரி நாளை நடைபெறுகிறது. அப்போது, அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

இந்நிலையில், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு, பவுர்ணமி சிறப்பு ரயில்களும் வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னை- திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Pournami Krivalam Annamalaiyar Thirawari ,Thi Bhosam ,Thirtawari ,Tiruvannamalai ,Pournami Krivalam ,Tai Bhusat ,Tirthawari ,Annamalai ,Iesanya Pond ,GRIVALAM ,WORSHIP ,PURNAMI ,THIRUVANNAMALA ,
× RELATED தி.மலையில் நாளை பவுர்ணமி கிரிவலம்...