×

புதுக்கோட்டை, திருச்சியில் ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த 1,250 காளைகள் மல்லுக்கட்டிய 600 வீரர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,250 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ ஐஸ்வர்யா துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து வந்தன. இதனை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாட்டு காட்டின. துணிச்சலுடன் காளைகளை அடக்கிய வீரர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், மின் விசிறி, மிக்சி, கட்டில், டைனிங் டேபிள், சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித அந்தோணியார் பெருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 600 காளைகள் கலந்து கொண்டன. 300 வீரர்கள் களமிறங்கினர்.  போட்டியை காலை 9 மணிக்கு ஆர்டிஓ சீனிவாசன், டிஎஸ்பி காவியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் செவலூர் சின்னாகவுண்டர் காளையும், கோயில் காளையும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இங்கு கட்டில், சைக்கிள், பீரோ, பித்தளை, சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Jallikattu ,Pudukkottai ,Trichy ,Mariamman Temple festival ,Kattupatti ,Alangudi ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து மருத்துவம்...