புதுடெல்லி: பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதில்,\\” நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி, உடற்திறன் குறைபாடு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் பாகுபாட்டை களைய வேண்டும். குறிப்பாக பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியினர், சமூக மற்றும் கல்வியில் அடிப்படையில் பின்தங்கியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு எதிராக நடைபெறும் பாகுபாட்டை ஒழிக்கும் வகையில் ‘‘சமத்துவ மேம்பாட்டு விதிமுறை 2026” என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
புதிய விதிமுறைகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவானது அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு வழங்க கொண்டுவரப்பட்ட விதிமுறை தொடரும்.
மேலும் யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நிபுணர்கள் அமைத்து ஒன்றிய அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை ஆய்வு செய்ய வேண்டும். இதில் யுஜிசி கொண்டு வந்த ‘சமத்துவ மேம்பாட்டு விதிமுறை 2026’ தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழக மானிய குழுவால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய விதிமுறைகள் தொடரும்” என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
