×

சிறுபான்மையினருக்கு எதிரான வங்கதேச தாக்குதல் சம்பவங்கள் கண்காணிப்பு: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் சம்பவங்கள் குறித்த அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,\\”வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களின் வீடுகள், சொத்துக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்த அறிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த விஷயத்தை இந்தியா, வங்கதேச அதிகாரிகளிடம் பல முறை தொடர்ந்து எழுப்பியுள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரதமராலும், 2025ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சராலும் எழுப்பப்பட்டது. இந்த சம்பவங்களை முழுமையாக விசாரித்து சிறுபான்மையினருக்கு எதிரான கொலைகள், தீ வைப்பு மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் எந்தவித சாக்குப்போக்கும் இன்றி நீதியின் முன் நிறுத்தி வங்கதேச அரசு தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* 10லட்சம் பேருக்கு 22 நீதிபதிகள்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்து மூலமாக அளித்த பதில்: நாட்டில் 10லட்சம் மக்கள் தொகைக்கு தோராயமாக 22நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* விமானி – விமான விகிதம்
மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த பதிலில்,‘‘இந்தியாவில் உள்ள உள்நாட்டு விமான நிறுவனங்களில் தற்போது விமானி-விமான விகிதம் போதுமானதாக கண்டறியப்பட்டுள்ளது. விமான சேவைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்காக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள், பிற சர்வதேச சிறந்த நடைமுறைகளையும் டிஜிசிஏ கருத்தில் கொண்டுள்ளது” என்றார்.

* டிவியில் மதுபானம், பான் மாசாலா விளம்பரங்கள்
தொலைக்காட்சிகளில் மதுபானம், பான் மாசாலாவுக்கான மாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜ எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்னையை எழுப்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி லட்சுமணன், ‘‘அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சிகளின்போது காட்டப்படும் பான் மசாலா, குட்கா, மதுபானம் மற்றும் பிற வயது வந்தோருக்கான தயாரிப்புக்களின் விளம்பரங்கள் மாற்று வர்த்தக முத்திரை மூலமாக செய்யப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Tags : Bangladesh ,Union government ,Rajya Sabha ,New Delhi ,India ,Minister of State for External Affairs ,Kirti Vardhan Singh ,
× RELATED நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு...