×

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கேரள பட்ஜெட்டில் சலுகை

* ஏப்.1 முதல் புதிய ஓய்வூதிய திட்டம்
* பிப்.1 முதல் இலவச மருத்துவ காப்பீடு
* அகவிலைப்படி, கூடுதல் படிப்புக்கான ஊக்கத்தொகையும் வழங்க முடிவு

திருவனந்தபுரம்: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கேரள பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் நேற்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
* அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ. 1,000 வழங்கப்படும்.
* கேரளாவில் உள்ள சுமார் 11 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘மெடிசெப்’ மூலம் இலவச மருத்துவபரிசோதனை பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.
* அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி, உயர்படிப்புக்கான ஊக்கத்தொகை முழுமையாக வழங்கப்படும்.
* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும்
* பெட்ரோல், டீசல் ஆட்டோ வைத்திருப்பவர்கள் மின்சார ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 40 ஆயிரம் போனஸ் வழங்கப்படும். அவர்கள் வாகனம் வாங்குவதற்கு பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கியிருந்தால் வட்டியில் 2 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
* பம்பை நதியைச் சுத்தம் செய்வதற்காகவும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 5 நாட்கள் அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
* ஆட்டோ , டாக்ஸி மற்றும் லாட்டரித் தொழிலாளர்கள், மீனவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.
* இடுக்கி மாவட்டம் கட்டப்பனை முதல் தேனி வரை சுரங்கப்பாதை ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்படும்.

* பிறப்பிட அடையாள அட்டைக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
ஒன்றிய அரசின் குடியுரிமை சட்டம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவற்றில் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக கேரளாவில் வாழ்ந்து வருபவர்களின் அச்சத்தை போக்குவதற்காக கேரள அரசு பிறப்பிட அடையாள அட்டை வழங்க தீர்மானித்துள்ளது. கேரளாவில் உள்ள அனைவருக்கும் இந்த பிறப்பிட அடையாள அட்டை வழங்குவதற்காக சட்டம் கொண்டு வரப்படும். இந்தத் திட்டத்திற்காக ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அய்யா வைகுண்டசாமி நினைவு இல்லம் அமைக்க ரூ.2கோடி ஒதுக்கீடு
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்டசாமி நினைவு இல்லம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பிரஸ் கிளப் அருகே 8.50 சென்ட் அரசு நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,THIRUVANANTHAPURAM ,
× RELATED சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு...