×

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல்: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்; இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பிரச்னை இல்லை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ உரையாற்றினார். நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

2025- 2026ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
* அடுத்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8-7.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2027ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு, நடப்பு நிதியாண்டிற்கு மதிப்பிடப்பட்ட 7.4சதவீத வளர்ச்சியை விட குறைவாகும்.
* உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையே பொருளாதாரம் சீரான விரிவாக்கப் பாதையில் பயணிப்பதால் நடுத்தர கால வளர்ச்சிக்கான சாத்தியக்கூறு 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா தொற்று காலத்தில் விரிவடைந்த ஆன்லைன் கற்பித்தல் கருவிகளை சார்ந்திருப்பதை குறைத்து நேரடி கற்றல் முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கு இளம் பயனர்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும். சமூக ஊடகங்கள், சூதாட்ட செயலிகள், தானாக இயங்கும் அம்சங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு வயது சரிபார்ப்பு மற்றும் வயதுக்கு ஏற்ற இயல்பு நிலை அமைப்புகளை அமல்படுத்த தளங்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.
* அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீது ஊட்டச்சத்து அடிப்படையிலான வரி அறிமுகப்படுத்த வேண்டும். சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு பொருட்களுக்கான வரம்புகளை மீறும் உணவுப்பொருட்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி விகிதம் மற்றும் கூடுதல் கட்டணம்.
* ஒரு டாலருக்கு ரூ.92 என்ற நிலைக்கு சரிந்துள்ள ரூபாயின் மதிப்பு இந்தியாவின் சிறந்த பொருளாதார அடிப்படைகளை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை.
* உலகளாவிய நிலையற்ற தன்மைக்கு இடையே அந்நிய நேரடி முதலீட்டை நிலைநிறுத்த பன்முக உத்தி தேவையாகும். அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு முன்னோக்கிச் செல்லும் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.
* சாதகமான கொள்கை சூழல், அதிகரித்து வரும் தேவை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
* தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு விலைமதிப்பற்ற உலோகங்களுகு்கு நீடித்த தேவை இருப்பதால் அவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது அவசியம்
8ம் வகுப்புக்கு பின் பள்ளி மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இடைநிலைப் பள்ளி வயதுக்குட்பட்டோரின் நிகர சேர்க்கை விகிதம் 52.2 சதவீதமாக குறைவாகவே உள்ளது.

* அபாயகரமான வேகத்தில் உடல் பருமன்
உடல் பருமன் அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இது நாட்டில் இன்று உள்ள மிகப்பெரிய சுகாதார சவால் ஆகும்.மக்களின் உணவில் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மற்றும் உணவு பழக்க சீர்திருத்தங்களை ஒரு பொது சுகாதார முன்னுரிமையாக கருதவேண்டும் என்று பொருளாதார அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* தகவல் அறியும் உரிமை சட்டம் முடிவுக்கு வருகிறதா?
ஆர்டிஐ தவறாக பயன்படுத்துவதை தடுக்க வலுவான நாடாளுமன்றக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை, ஊழலை அம்பலப்படுத்தும் வலுவான ஆயுதமாக உள்ள ஆர்டிஐஐ முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், நிறுவனங்களுக்கு இடையேயான குறிப்புகள் ஆர்டிஐயில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. ஸ்வீடனில் நிதி மற்றும் பணவியல் கொள்கை விவாதங்ளை ஆர்டிஐயில் பெற முடியாது. கட்டுப்பாடற்ற வெளிப்படைத்தன்மை நிர்வாகத்தை கடினமாக்கியது என முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் ஒப்புக்கொண்டதையும் இந்த ஆய்வு மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அதிக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விளம்பரத்துக்கு தடை
இந்தியாவில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான நுகர்வு அதிகரித்து வருகின்றது. கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தடை விதிக்க பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பருமன் அதிகரித்து வருவதால், கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பால் மற்றும் பானங்களின் சந்தைப்படுத்தலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,Budget Session of Parliament ,President ,Draupadi Murmu ,Houses of Parliament ,Union Budget ,
× RELATED சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு...