×

மகாராஷ்டிரா விமான விபத்தில் பலி முழு அரசு மரியாதையுடன் அஜித்பவார் உடல் தகனம்: அமித்ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

புனே: விமான விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் அஜித்பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அமித்ஷா உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவார் (66), கடந்த 28ம் தேதி விமான விபத்தில் மரணமடைந்தார். ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொள்வதற்காக அவர் மும்பையில் இருந்து சென்ற விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதில் அஜித்பவார், அவருடைய பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமான பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஜித்பவாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து அஜித்பவார் உட்பட அனைவரது சடலங்களும் மீட்கப்பட்டு பாராமதியில் உள்ள புண்யஸ்லோக் அகில்யாதேவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. புதன்கிழமை இரவு முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அஜித்பவாரின் சடலம், நேற்று காலை அவரது சொந்த ஊரான புனேவில் உள்ள கடேவாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அஜித்பவாரின் சடலம் கொண்டு வரப்பட்ட போது, அக்கிராமமே கலங்கி நின்றது. அஜித்பவாரின் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிற அரசியல் தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் கண்ணீர் மல்க பவாருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். பின்னர், தேசியக்கொடி போர்த்தப்பட்ட அஜித்பவாரின் உடல் கடேவாடி கிராமத்தில் இருந்து பவார் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட வித்யா பிரதிஷ்டான் கல்லூரி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, பாஜ தலைவர் நபின், முதல்வர் பட்நவிஸ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் அஜித்பவாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஜித் பவாரின் தம்பி னிவாஸ் பவார், சகோதரிகள் மற்றும் உறவினர் அபிஜித் பவார் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், கட்சித் தலைவர் மாணிக்கராவ் தாக்கரே மற்றும் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஜித்பவாரின் உடல், தகன மேடைக்கு கொண்டு வரப்பட்ட போது அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார், அவரது தங்கை சுப்ரியா சுலே உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. அஜித்பவாரின் சித்தப்பாவான சரத்பவார், மனமுடைந்து அமைதியாக அமர்ந்திருந்தார். அதை தொடர்ந்து இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. பவாரின் மகன்களான பார்த் மற்றும் ஜெய் பவார் இறுதிச் சடங்குகளை செய்த பிறகு, முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது இறுதிச் சடங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ‘அஜித் தாதா அமர் ராஹே‘ (அஜித்பவார் புகழ் அழியாது) என்று கண்ணீர் மல்க எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தது.

* விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
பாராமதியில் விபத்தில் சிக்கிய விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான லியர்ஜெட் 45 விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஏஏஐபி அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஏஏஐபி இயக்குநர் ஜெனரல் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு, விமானத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அஜித்பவார் மனைவி அமைச்சராகிறாரா?
மறைந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதுவரையில் நிதியமைச்சராக அஜித்பவார் தான் பட்ஜெட் அனைத்தையும் தாக்கல் செய்து வந்தார். தற்போது அவரது மறைவுக்கு பிறகு, அந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை, அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமென்று அவரது என்சிபி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரை அமைச்சரவையில் சேர்க்க மக்கள் விரும்புவதாக என்சிபி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று அஜித்பவாரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட பிறகு பேசிய ஜிர்வால், ‘சுனேத்ரா பவாரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து மாநில அரசிடம் பேசுவோம்’ என்று கூறினார். மேலும் தேசியவாத காங்கிரசின் இரு அணிகளும் மீண்டும் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜிர்வால், ‘இரு பிரிவுகளும் ஏற்கனவே ஒன்றாகத் தான் இருக்கின்றன. இனிமேல் பிரிந்து இருப்பதில் எந்த பயனும் இல்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துவிட்டனர்’ என்று கூறினார்.

Tags : Maharashtra ,Ajit Pawar ,Amit Shah ,Pune ,Deputy Chief Minister ,Nationalist Congress Party ,
× RELATED சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு...