- சஷி தரூர்
- கார்கே
- புது தில்லி
- காங்கிரஸ்
- திருவனந்தபுரம்
- கேரளா
- பஹல்காம் சம்பவம்
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்...
புதுடெல்லி: “எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் காங்கிரஸ் தலைமையுடன் ஒருங்கிணைந்து செல்கிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூர். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி புகழ்ந்து பேசி வந்தார். மேலும், ஒன்றிய பாஜ அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து பாராட்டி பேசி வந்தார். இதனால் சசி தரூர் மீது காங்கிரஸ் தலைமையும், கட்சியினரும் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். கடந்த 19ம் தேதி கொச்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, கூட்டத்தில் சசி தரூரின் பெயரை சொல்லவில்லை. இதனால் சசி தரூர் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இதேபோல், நடப்பாண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள கேரளா பேரவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 23ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்புக்கு பின் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘ எனது இரண்டு கட்சித் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேயுடன் இணைந்து நாங்கள் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். நாங்கள் ஒரு மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது, நாங்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். நான் எந்தப் பதவிக்கும் வேட்பாளராக இருப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நேரத்தில் நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை’ என்று தெரிவித்தார். இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,’ பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து ஒரு சுமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நடத்தியதற்காக கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி. இந்தியாவின் மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் முன்னோக்கிச் செல்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
