×

வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர் போலீசை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: பெரம்பலூர் அருகே அதிகாலை பரபரப்பு

பெரம்பலூர்: ஓட்டலில் வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி கொட்டு ராஜா, போலீசை வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரம்பலூர் அருகே நேற்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து (எ) வெள்ளைக்காளி(30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறையில் இருந்து அவரை ஆயுதப்படை எஸ்ஐ ராமச்சந்திரன்(54) தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை, மதுரை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தினர்.

கடந்த 23ம்தேதி இரவு திண்டுக்கல் சிறையில் அடைத்து மறுநாள் காலை புழல் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாலையோர ஓட்டலில் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், வெள்ளைக்காளியை கொலை செய்ய 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் எஸ்ஐ ராமச்சந்திரன், போலீஸ்காரர்கள் மருதபாண்டி, வினேஷ்குமார் ஆகியோர் காயமடைந்தார். எஸ்ஐ ராமச்சந்திரன் துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி 10 ரவுண்டு சுட்டபோதும் கும்பல் தப்பிவிட்டது.

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசியவர்களில் ஒருவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கியிருப்பதாக மங்களமேடு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான தனிப்படை ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊட்டிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த ரவுடி சோலையப்பன் மகன் கொட்டு ராஜா (எ) அழகுராஜா(30) என்பதும், வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசியவர்களில் முக்கியமானவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கொட்டு ராஜாவை கைது செய்த தனிப்படை போலீசார், பெரம்பலூருக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வனப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், குன்னம் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 1 மணியளவில் அழகுராஜாவை அந்த இடத்தக்கு கூட்டி சென்றனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து திடீரென போலீசார் மீது கொட்டு ராஜா வீசியதில் போலீஸ் வாகனம் லேசாக சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த அரிவாளை எடுத்து குன்னம் எஸ்ஐ சங்கரின் இடது முழங்கையில் வெட்டி விட்டு காட்டு பகுதிக்குள் கொட்டு ராஜா தப்பியோடினார்.

இதனால் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துப்பாக்கியால் அழகுராஜாவை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்து அழகுராஜா சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே கொட்டு ராஜா இறந்தார். காயமடைந்த குன்னம் எஸ்ஐ சங்கர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த பெரம்பலூர் எஸ்பி அனிதா, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று எஸ்ஐ சங்கரிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். கொட்டு ராஜா உடல் வைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கூட்டாளிகள் 6 பேர் சிறையில் அடைப்பு
போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி கொட்டுராஜாவுடன் ஊட்டியில் கைதான அவரது கூட்டாளிகளான கார்த்திக்(29), அலெக்ஸ் பாண்டியன்(24), அரவிந்த் (29), வினோத்குமார் (34), பாண்டி முனிஸ்வரன்(27), நிர்மல்குமார் (26) ஆகியோர் தனிப்படை போலீசார் விசாரணைக்கு பின்னர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து நேற்று மதியம் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்2ல் நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 6பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

* துப்பாக்கி சூடு ஏன்? ஐஜி விளக்கம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ சங்கரை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேற்று நேரில் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் கூறுகையில், கொட்டு ராஜா ஆயுதங்களை காண்பிப்பது போல் ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து போலீசார் மீது வீசியிருக்கிறான். அந்த குண்டு போலீஸ் ஜீப் மீது விழுந்து சேதமடைந்தது. மேலும் அரிவாளை எடுத்து எஸ்ஐ சங்கரை வெட்டியுள்ளான். இதனால் தற்காப்புக்காக கொட்டு ராஜாவை நோக்கி இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஒரு ரவுண்ட் சுட்டதில் அவனது தலையில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த கொட்டு ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பிலேயே அரசு மருத்துவமனைக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர். இருப்பினும் கொட்டு ராஜா இறந்துவிட்டான் என்றார்.

* தனிப்படையினரை அலைக்கழித்த கொட்டு ராஜா
ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடத்தை காட்டுவதாக கூறி தனிப்படை போலீசாரை 2 இடங்களுக்கு மாற்றி மாற்றி கொட்டு ராஜா அழைத்து சென்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட அந்த இடங்களில் ஆயுதம் எதுவும் இல்லை. பின்னர் தான் திருமாந்துறை வனப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். ரவுடி கொட்டு ராஜா மீது 3 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, ஒரு வெடி மருந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* குடும்பத்தினரிடம் நீதிபதி விசாரணை
திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், என்கவுன்டர் நடந்த இடத்தில் தேவையான தடயங்களை சேகரித்தனர். என்கவுன்டர் நடந்த திருமாந்துறை வனப்பகுதி, ஏற்கனவே குண்டு வீசி தாக்குதல் நடந்த தனியார் ஓட்டலுக்கு சென்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ரவுடி கொட்டுராஜாவின் உடலை பார்வையிட்ட நீதிபதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

Tags : Rawudi Encounter ,Perambalur ,RAVUDI KOTU RAJA ,RAVUDI ,Madurai Kamrajapuratha ,
× RELATED சுவரில் துளையிட்டு அடகு கடையில்...