×

போலீஸ் காவலில் வெடிகுண்டு வீச்சுக்குள்ளான மதுரை ரவுடி வெள்ளைக்காளி யார்..? பரபரப்பு தகவல்கள்

சென்னை: இரு நாட்களுக்கு முன்னர் பெரம்பலூர் டோல்கேட் அருகே போலீஸ் பாதுகாப்புடன் பிரபல ரவுடி வெள்ளைக்காளி வந்தபோது, சிலர் அவன் சென்ற வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் மீது குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் படுகாயமடைந்தனர். வெள்ளைக்காளி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. அதே ஊரைச் சேர்ந்தவர் வி.கே. குருசாமி. இவரும் நெருங்கிய உறவினர். இவர்கள் இருவரும், 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் தனித்தனியாக குடியேறினர்.
ஆரம்பத்தில் வி.கே. குருசாமி திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். மதுரை கிழக்கு மண்டல சேர்மனாக இருந்தார். ராஜபாண்டி அதிமுக ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவர், அதிமுக மதுரை கிழக்கு மண்டல சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதில், மதுரை கிழக்கில் கட்சி கொடிகள் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து கடந்த 23 ஆண்டுகளாக நடக்கும் பழிக்கு பழியாக இரு தரப்பிலும் கொலைகள் நடந்தன.

இந்தநிலையில் 2003ல் ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமி ஆட்கள் கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் முனுசாமியின் தம்பியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளி, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான மூர்த்தி, ரமேஷ், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் 2008ல் கொலை செய்தார். அதைத்தொடர்ந்து வி.கே.குருசாமியின் தங்கையின் கணவர் பாம்பு பாண்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைகளுக்கு பழிக்குப் பழி வாங்க, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள், ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை 2015ல் கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழி வாங்க, அதே 2015ல் ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமி ஆதரவாளரான பெரிய முனுசாமியை கொலை செய்தனர்.

தொடர்ந்து, 2016ல் வி.கே.குருசாமி மருமகனான காட்டுராஜா என்கிற முத்துராமலிங்கத்தை கொலை செய்தனர் ராஜாபாண்டியின் ஆதரவாளர்கள். 2017ல் ஜூன் மாதம் ராஜபாண்டி மகன் முனுசாமி என்ற தொப்பிலியை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து வி.கே.குருசாமி ஆதரவாளர்கள் எரித்துவிட்டனர். இதனால் ராஜபாண்டி ஆதரவாளர்கள், வி.கே.குருசாமி குடும்பத்தை குறிவைத்து, அவரது மருமகனான எஸ்.எஸ்.பாண்டியனை கொலை செய்தனர். இதுபோன்று இரு பக்கமும் தொடர்ந்து கொலைகள் நடந்து வந்ததால், அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வி.கே.குருசாமி, ‘‘முனுசாமி தம்பியும் ராஜபாண்டி ஆதரவாளருமான வெள்ளைக்காளிக்கு நான் 2 கோடி ரூபாய் கொடுத்துவிடுகிறேன். இனி கொலைகள் வேண்டாம்’’ என்று கூறியிருக்கிறார். ஆனால், வெள்ளைக்காளி, ‘‘எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம். வி.கே.குருசாமியை போட்டுவிட்டு, அந்த குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்கிறேன். வாங்கிக்க சொல்லுங்கள். அப்படி வேண்டுமானால் சமாதானம் ஆகலாம்’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் குருசாமி காதுக்கு சென்றதும், அவர் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராஜபாண்டியையும் வெள்ளைக்காளியையும் கொலை செய்ய திட்டமிட்டார்.

இதை தெரிந்துகொண்ட வெள்ளைக்காளியும், ராஜபாண்டியும் உஷாராகி, வி.கே.குருசாமியை போட்டுத்தள்ள திட்டமிட்டனர். இதுபோன்று, மீண்டும் இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு நேரம் பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் 2023 செப்டம்பர் மாதம் வி.கே.குருசாமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு சென்றார். பெங்களூருவில் கம்மன்னஹள்ளி சத்சாகர் ஓட்டலில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை, இங்கிருந்து பின்தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட கும்பல் தலை முகத்தை சிதைத்துவிட்டு, இறந்துவிட்டார் என்று நினைத்து சென்றுவிட்டனர்.

இந்த சூழலில் குருசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மதுரையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார். தற்போது வரை முகத்தை எங்கும் காட்டாமல் இருந்து வருகிறார். இந்த சூழலில், வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். எனினும் கூலிப்படை மூலம் சிறையில் இருந்தே அவர் குற்றச்செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு (22.3.2025) ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமிக்கு வலதுகரமாக இருந்த அவரது சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரனை கொலை செய்தது. இந்த வழக்கிலும் வெள்ளக் காளியை போலீசார் குற்றவாளியாக சேர்த்தனர். வெள்ளைக்காளி மீது இதுவரை 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதில் வி.கே.குருசாமி, ராஜபாண்டி தரப்பு குடும்பங்களிடையே பகை ஒரு புறம் இருக்க, செலவுக்காக வெள்ளைக்காளி தரப்பினர் கூலிப்படையினராக மாறிவிட்டனர். இதனால் உறவினர்களுக்கிடையே நடந்த மோதலில் மட்டும் ஈடுபடாமல், மாற்று சமூகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை இளவரசன், திருவாரூர் ராஜ்குமார், ராமர் பாண்டியன், சக்கிமங்கலம் பழனி ஆகியோர் கொலையிலும் வெள்ளைக்காளி பெயர் அடிபட்டது. இந்த கொலையில் நேரடியாக வெள்ளைக்காளி ஈடுபடாவிட்டாலும் இவரது ஆலோசனையின் பேரில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசுக்கு தெரிந்தும், நேரடி சாட்சி இல்லாததால் வழக்கில் சேர்க்காமல் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தை கலக்கி வரும் பிரபல ரவுடிகள் லோடு முருகன், திண்டுக்கல் மோகன்ராம், மீன்சுருட்டி சிற்றரசு போன்ற ரவுடிகளுடன் வெள்ளைக்காளி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். தற்போது சிறையில் சாதி பார்த்து தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை சாதி ரீதியாகத்தான் ரவுடிகள் செயல்பட்டு வருகின்றனர். இனம் பிரித்து இலவசமாக பெயில் எடுத்து கொடுப்பது, பின்னர் அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துவது மதுரை சிறையில் இருந்த போது அவருக்கு தெரிந்த வக்கீல்கள் மூலம் அனைத்து குற்ற செயல்களையும் வெள்ளைக்காளி செய்து வந்தார். இதற்காக சிறைக்குள் செல்போனையும் பயன்படுத்தி வந்தார்.

இதனை அறிந்த சிறைத்துறை காளியை புழல் சிறைக்கு மாற்றியது. 2023ம் ஆண்டில் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு எதிராக பகிரங்கமாக கொலை மிரட்டல் விட்டார்கள் காளி தரப்பினர். எதிர் தரப்பினரை கொலை செய்ய செலவுக்கு இப்பொழுது கஞ்சா கடத்தலையும் வெள்ளைக்காளியின் ஆதரவு ரவுடிகள் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் தொண்டி முதல் சாயல்குடி வரையிலான கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவை ரவுடிகள் கடத்துவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன.

காளிக்கு ஏற்கனவே மதுரை நீதிமன்றம் கஞ்சா வழக்கில் பத்து ஆண்டு வரை தண்டனை அளித்து உள்ளது. காளியின் வீடு மதுரை மாநகர் காவல் துறை கட்டுபாட்டில் வருகிறது. மதுரையைப் பொறுத்தவரை கீழ் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை காளியின் பூர்வீக மாவட்ட சார்ந்தவர்கள், உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த போலீசார் அதிகமாக மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றுவதால், அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகளின் அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் தெரிந்து விடும். மேலும், சிறைக்குள் இருந்தபடியே வெள்ளைக்காளியால் கொலைகளை செய்ய முடியும். அந்த அளவுக்கு தமிழகத்தில் தற்போது அபாயகரமான ரவுடியாக உள்ளான். ராஜபாண்டி கோஷ்டியின் தற்போது வேகமாக இருப்பது வெள்ளைக்காளிதான் என்று கூறப்படுகிறது.

இவன் மீதுதான் கடந்த சனிக்கிழமை பெரம்பலூர் டோல்கேட் அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. போலீசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரவுடிகளுக்கு உதவும் போலீஸ்
குற்றவாளிகளுக்கு போலீஸ் துணை இல்லாமல் எந்த குற்றச்சம்பவங்களும் நடக்காது. குறிப்பாக தென் மாவட்டத்தைப் பொறுத்தவரை சாதி ரீதியிலாக குறிப்பாக உளவுத்துறை, சிறப்பு படை, ஓசிஐயு, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிசிஐடி போன்ற சிறப்பு படைகளில் உயர் அதிகாரிகளைப் பிடித்து வந்து அமர்ந்து விடுகின்றனர். குறிப்பாக மதுரை மாநகர் காவல் துறையில் உளவுத்துறை எஸ்எஸ்ஐ மற்றும் கமிஷனர் ஸ்பெஷல் டீம் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர், மது விலக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர், மதுரை புறநகர் எஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் சிட்டி துணை கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்க கூடிய போலீஸ்காரர் மற்றும் ஓசிஐயு பிரிவு என வெள்ளைக்காளியின் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக மாநில உளவுத்துறையை சார்ந்த காவல் ஆய்வாளர்கள் மதுரை, விருதுநகர் ஆகியோர் ஒரே அணியாகவும், சாதி ரீதியிலும் செயல்படுவதவாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விருதுநகர் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறவரின் தம்பி கருணாஸ் கட்சி மாநில பொறுப்பாளராக உள்ளார். மேலும், இதில் பலருக்கு ரவுடிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் என்பதோடு, ரவுடிகள் செய்யும் கஞ்சா கடத்தலை முழுமையாக மறைப்பதாகவும், உளவுத் தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு கூறாமல் மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Tags : Vellai Kaali ,Chennai ,Perambalur tollgate ,Vellai Kaali’s… ,
× RELATED துப்பாக்கி முனையில் சிறுமிக்கு...