திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் அடகு கடையின் சுவரின் துளையிட்டு தங்கம், வெள்ளி நகைகள், பணம் கொள்ளையடித்து தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கத்தில் வசித்து வருகின்றவர் புத்தாராம் (46). இவர் கடந்த 7 வருடத்துக்கு முன் அருகே உள்ள எறையூர் கிராமத்தில் அடகு கடை துவங்கினார். அடகு கடை அருகில் சம்சுதீன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இவர் 7.30 மணியளவில் அடகு கடையை பூட்டிவிட்டு புத்தாராம் சென்றுவிட்டார். இதன்பிறகு கொஞ்ச நேரத்தில் சம்சுதீன் செல்போனில் புத்தாராமை தொடர்பு கொண்டு கடையின் பின்புறம் துளையிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக புத்தாராம் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்துள்ளார். பின்பக்க சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் புகுந்து அடகு கடையில் உள்ள 4 கிராம் தங்கம், 176 கிராம் எடை வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு ஜோடி கொலுசு, ரூ.20 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து புத்தாராம் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். அடகு கடையின் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
