×

திருப்பூரில் பூட்டை உடைத்து துணிகரம் பயங்கர ஆயுதங்களுடன் 4 நிறுவனங்களில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

*சிசிடிவி காட்சியை கைப்பற்றி தனிப்படை தேடுதல் வேட்டை

திருப்பூர் : திருப்பூர், அணைப்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் அடுத்தடுத்த 4 நிறுவனங்களில் பூட்டை உடைத்து 5 முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் சோதனைச்சாவடி அருகே பனியன் சார்ந்த 4 தொழில் நிறுவனங்கள் உள்ளன. நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தபோது நிறுவனங்களின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தன.

அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் கலைக்கப்பட்டும், பீரோக்கள் உடைக்கப்பட்டும் கிடந்தன. நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் உரிமையாளர்கள் வந்தனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் 5 முகமூடி கொள்ளையர்கள் நேற்று அதிகாலை இரும்பு ராடு மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

4 நிறுவனங்களிலும் மொத்தம் ரூ.5 ஆயிரம் கொள்ளை போனதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூக முடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : Tiruppur ,Tirupur ,Tiruppur, Huaipalayam ,College Road ,Anippalayam ,
× RELATED போலீஸ் காவலில் வெடிகுண்டு...