திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் கருணாகர். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது பள்ளி பருவ காதலி வசுந்தரா . வசுந்தரா நர்ஸிங் படித்து நர்ஸ்சாக பணி புரிந்து வந்தார். இவர்களது காதல் முறிந்த நிலையில், பெண் டாக்டர் ஒருவரை கருணாகர் திருமணம் செய்தார். வசுந்தராவை பிரிந்தார். இதைத்தொடர்ந்து வசுந்தரா, கருணாகரை பெண் டாக்டரிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டார்.
மேலும் தனது தோழியான ஆதோனியை சேர்ந்த கோங்கே ஜோதி, அவரது மகன்களான பூமா ஜஸ்வந்த், பூமா ஸ்ருதி ஆகியோரிடம், எனது திட்டத்திற்கு உதவி செய்தால், உங்களுக்கு பணம் தருவதாக கூறினார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 9ம் தேதி மதியம் பெண் டாக்டர், பணி முடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வசுந்தரா, கோங்கே ஜோதி, பூமா ஜஸ்வந்த் மற்றும் பூமா ஸ்ருதி ஆகியோர் திட்டம் தீட்டியபடி, பூமா ஜஸ்வந்த், ஸ்ருதி ஆகியோர் பைக்கில் வேகமாக வந்து, பெண் டாக்டர் மொபட் மீது மோதினர். இதில் கிழே விழுந்து பெண் டாக்டர் காயமடைந்தார். அவரை ஆட்டோவில் ஏற்றிய வசுந்தரா, மறைத்து வைத்திருந்த ஊசியை எடுத்து அதிலிருந்த எச்ஐவி நோயாளியின் ரத்தத்தை பெண் டாக்டரின் கையில் செலுத்தினார். வசுந்தரா, ஜோதி, பூமா ஜஸ்வந்த் மற்றும் ஸ்ருதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
