×

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘நகர்ப்புற நக்சல்களும், சட்டவிரோத குடியேறிகளும் தேசிய பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’’ என பிரதமர் மோடி பேசினார். பாஜ கட்சியின் புதிய தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது: தற்போது நகர்ப்புற நக்சல்களும், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஆகியவை தேசத்தின் முன் உள்ள முக்கிய சவால்களாக உள்ளன. உலகெங்கிலும் யாரும் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களை உலகின் அதிபதிகள் என்று கருதும் சில பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகள் கூட சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு நாடு கடத்துகின்றன. யாரும் அவர்களின் செயல்களை கேள்வி கேட்பதில்லை.

அதே போல, சட்டவிரோத குடியேறிகள் இந்திய மக்களையும், ஏழைகளுக்கு சொந்தமான சேவைகளையும் கொள்ளையடிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோத குடியேறிகளுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. நாம் அவர்களை அம்பலப்படுத்தி, மக்களின் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். நம் முன் உள்ள மற்றொரு முக்கிய சவால், உலகளவில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நகர்ப்புற நக்சல்கள். இவர்கள், என்னை பற்றியோ, பாஜ அரசைப் பற்றியோ ஆதரவாக பேசுபவர்களையும், அவர்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை அத்திபூத்தது போல் நல்லபடியாக பேசுபவர்களையும் கூட விட்டு வைப்பதில்லை. உடனே அவர்களை அமைதியாக்கி விடுகிறார்கள்.

அரசை பாராட்டி, என்னை பாராட்டி ட்வீட் செய்தாலோ, தொலைகாட்சியில் பேசினாலோ, பத்திரிகையில் எழுதினாலோ அவர்களை மிகவும் அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வேட்டையாடப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்படுகிறது. இதுதான் நகர்ப்புற நக்சல்களின் பாணி. நகர்ப்புற நக்சல்கள் இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்கத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். நமது கட்சியின் வலிமை மற்றும் சித்தாந்தம் மூலம் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக பாஜ தனிமைப்படுத்தப்பட்டு, தீண்டத்தகாத கட்சியாக நடத்தப்பட்டது. இப்போது நாடு இந்த தந்திரங்களை புரிந்து கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* எதிர்த்து பேசினால் நகர்ப்புற நக்சலா?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘மார்ச் 11, 2020 அன்று, உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை என்றார். ஏப்ரல் 29, 2024 அன்று, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கை விடுப்பவர்களையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலை தெரிவிப்பவர்களையும் நகர்ப்புற நக்சல் மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி இதை தெளிவுபடுத்துவாரா அல்லது தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள் என்று அவர் நம்புகிறாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,BJP ,national president ,Nitin… ,
× RELATED இதுவெல்லாம் சகஜம் என திமிராக...