புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியில், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் தந்தை பெயர் பொருந்தாதது, பெற்றோர் வயது பொருத்தம் இல்லாதது, தாய்-மகன் இடையேயான பொருந்தாத வயது வித்தியாசம் போன்ற சிக்கல்கள் உள்ளவர்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முரண்பாடு பட்டியல் எனப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று எஸ்ஐஆர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘மேற்கு வங்கம் போன்று தமிழ்நாட்டிலும் ஏராளமான வாக்காளர்கள் முரண்பாடு பட்டியலில் சேர்க்கப்பட்டு நோட்டீஸ் பெற்றுள்ளனர். எனவே இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘ தமிழ்நாடு அரசின் வழக்கை வரும் 27ம் தேதி கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
