புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மன்மோகன் சிங் ஆட்சியில், அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்டம் 15(5) பிரிவு கொண்டு வரப்பட்டது. இது, 93வது திருத்த சட்டம் மூலம் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் நிதி உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் இடஒதுக்கீடு பெற்று, கோடிகணக்கான மக்கள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மே 6, 2014ல் இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால், தற்போது 15(5) பிரிவை அமல்படுத்தும் எந்த சட்டமும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை. ஆகஸ்ட் 2025ல், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையிலும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களுக்காக ஒரே ஆணையம் அமைக்க மசோதா கொண்டு வரப்பட்டு நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15(5)ன் அமலாக்கத்தை கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதை மோடி அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
