×

பிரதமர் மோடி முன்னிலையில் பாஜவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார்: கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பாஜவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில், கடந்த மாதம் 14ம் தேதி கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபினை ஆதரித்து 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அமித்ஷா,ஜே.பி.நட்டா உட்பட அனைத்து மூத்த தலைவர்களும் நிதின் நபினை ஆதரித்தனர். இதன் மூலம், நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பாஜவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் கட்சி தலைமையகத்தில் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜவின் உட்கட்சி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி கே.லட்சுமணன், தேர்தல் முடிவை அறிவித்து, நிதின் நபினுக்கு வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார். பிரதமர் மோடி, நிதின் நபினுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு ஊட்டியும் தலைவர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஜே.பி.நட்டா, மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் முடிவுகளை அறிவித்த போது கே.லட்சுமணன், ‘‘இந்த தேர்தல் பாஜவில் தலைமை பதவி என்பது வம்சாவளி சலுகை அல்ல, கடின உழைப்பு, அர்ப்பணிப்பிலிருந்து கிடைக்கக் கூடியது என்பதை காட்டுகிறது’’ என்றார். முன்னாள் தலைவரான ஜே.பி. நட்டா பேசுகையில், ‘‘இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நமது இளம், ஆற்றல்மிக்க, திறமையான நிதின் நபின் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜவின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். என் சார்பாகவும் கோடிக்கணக்கான தொண்டர்கள் சார்பாகவும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

1980ம் ஆண்டில் நிறுவப்பட்ட பாஜ கட்சியின் 12வது தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் அதே ஆண்டில் பிறந்தவர். இதன் மூலம் 45 வயதில் பாஜவின் இளம் தேசிய தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பீகாரை சேர்ந்த நிதின் நபின், ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் கட்சியின் அடிப்படை பதவிகளில் இருந்து 26வது வயதில் எம்எல்ஏவாகி பின்னர் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கியமான 5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* நிதின் நபின் தான் இனி என்னுடைய பாஸ்: மோடி
பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவில் பெரும் மாற்றங்களை கண்ட தலைமுறையை சேர்ந்த ‘புதிய தலைமுறை இளைஞர்’ நிதின்நபின். இனி கட்சி விஷயங்களைப் பொறுத்த வரையிலும், நீங்கள் (நிதின் நபின்) தான் என்னுடைய பாஸ். நான் ஒரு தொண்டன். நிதின் நபின் தான் நம் அனைவருக்கும் தலைவர். அவருடைய பொறுப்பு பாஜவை நிர்வகிப்பது மட்டுமல்ல, அனைத்து என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும். நிதினிடம் இளமைத் துடிப்பு, பெரும் அனுபவம் ஆகிய இரண்டும் உள்ளன’’ என்றார்.

* இசட் பிரிவு பாதுகாப்பு
பாஜவின் புதிய தேசிய தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து, நிதின் நபினுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி நிதின் நபின் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது அவருடன் ஆயுதமேந்திய சிஆர்பிஎப் கமாண்டோக்கள் உடன் செல்வார்கள். அமித்ஷா, சோனியா காந்தி குடும்பத்தினர் உட்பட சுமார் 200 விஐபிக்களுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Nitin Nabin ,BJP ,president ,Modi ,New Delhi ,national president ,J.P. Nadda ,
× RELATED நகர்ப்புற நக்சல்கள் மற்றும்...