டாவோஸ்: டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற தீவு நாடான கிரீன்லாந்து, அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கு அவசியமானது எனக் கூறி, அந்த தீவு நாட்டை அதிபர் டிரம்ப் கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்த, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீத கூடுதல் வரி அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படுவதாக டிரம்ப் மிரட்டி உள்ளார். இதனால் கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் இடையேயான உறவை வெகுவாக சீர்குலைக்கும் கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் இந்த விவகாரம் நேற்று முக்கியமாக பேசப்பட்டது.
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டென் லேயன் பேசுகையில், ‘‘கிரீன்லாந்து விவகாரத்தில் நீண்ட கால கூட்டாளிகள் மீது வரி மிரட்டல் விடுப்பது மிகவும் தவறானது. இது அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது’’ என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ‘‘பிரான்சும் ஐரோப்பாவும் தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளன. நட்பு நாடான டென்மார்க்கை ஆதரிக்க கிரீன்லாந்தில் நடைபெறும் ராணுவ பயிற்சிகளில் சேர பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அதே சமயம், அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கட்டாய எதிர்ப்பு கருவியான வர்த்தக பீரங்கியை பயன்படுத்த தயங்க கூடாது’’ என்றார். வர்த்தக பீரங்கி என்னும் சொல், தனிநபர்கள், நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதார தடையை குறிப்பதாகும்.
இந்த சூழலில் உலக பொருளாதார மாநாட்டில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற உள்ளார்.
* பிரான்ஸ் ஒயின்களுக்கு 200% வரி
கிரீன்லாந்து விவகாரத்திற்கு மத்தியில் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்து விட்டது. இந்த வாரியத்தில் பிரான்ஸ் சேராவிட்டால் அந்நாட்டின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இதற்கிடையே, கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் ஜி7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வலியுறுத்தி உள்ளார்.
