×

ஒவ்வொரு வருடமும் மலை போல் குவிகிறது பாஜவிடம் ரூ.10,000 கோடி நிதி: தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: பா.ஜவிடம் ரூ.10 ஆயிரம் கோடி நிதி இருப்பது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் 2014ல் ஒன்றிய அரசு அமைந்த பிறகு பா.ஜவுக்கு கட்சி நிதி அதிக அளவில் திரண்டு வருகிறது. தற்போது அந்த நிதி ரூ.10 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. சமீபத்தில் தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட பா.ஜவின் வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, பாஜ கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டில நடந்த டெல்லி, ஒடிசா தேர்தலில் பா.ஜவின் தேர்தல் பிரச்சாரச் செலவுகள் ரூ.1,754.06 கோடியிலிருந்து ரூ.3,335.36 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. மேலும் 2024-25 ஆம் ஆண்டில் பாஜ கட்சியின் ரொக்கம் மற்றும் வைப்புத்தொகை மட்டும் ரூ.2,882.32 கோடி அதிகரித்துள்ளது. 2025 மார்ச் 31 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான கட்சியின் கணக்குகள், முந்தைய ஆண்டில் ரூ.9,169 கோடியாக இருந்த பொது நிதி இறுதி இருப்பு தற்போது ரூ.12,164 கோடியாக உயர்ந்தது.

பொது நிதியில் ரூ.9,996 கோடி ரொக்கம் மற்றும் வங்கி வைப்புத்தொகையாகவும், ரூ.234.11 கோடி கட்சியால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்களாகவும் உள்ளன. மேலும் 2024-25 ஆம் ஆண்டில், பாஜ தன்னார்வ பங்களிப்புகளாக ரூ.6,125 கோடியைப் பெற்றது. இது முந்தைய ஆண்டின் ரூ.3,967 கோடியை விட அதிகமாகும். அதே போல் ரூ.9,390 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகைகளுக்காக பாஜ 2024-25 ஆம் ஆண்டில் வங்கிகளிடமிருந்து மொத்தம் ரூ.634 கோடியை வட்டியாகப் பெற்றது. மேலும் ரூ.65.92 கோடி வருமான வரித் தொகையைத் திரும்பப் பெற்றது. அதற்கு ரூ.4.40 கோடி வட்டியையும் பெற்றது.

2024-25 ஆம் ஆண்டு தேர்தல்களுக்காக செலவிடப்பட்ட மொத்த ரூ.3,335.36 கோடியில், பாஜ தனது வேட்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ரூ.312.9 கோடியையும், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்வதற்கு ரூ.583 கோடியையும் செலவிட்டுள்ளது. தேர்தல்களின் போது விளம்பரம் மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மின்னணு ஊடகங்களுக்கு ரூ.1,125 கோடியும், கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளுக்கு ரூ.107 கோடியும், அச்சிடப்பட்ட பொருட்களுக்கு ரூ.123 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : BJP ,Election Commission ,New Delhi ,Union government ,Modi ,
× RELATED நகர்ப்புற நக்சல்கள் மற்றும்...