×

தாமிரபரணி ஆறு தூய்மை பணி விவகாரம் ராஜஸ்தான் நீர் பாதுகாப்பு நிபுணர் ஆணையராக நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் கிளையில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து ஆற்றை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் நெல்லை மாநகராட்சி ஆணையர் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி காமராஜ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் திருப்தியளிக்கவில்லை. நீதிமன்றத்தில் இதுவரை எந்த திட்டமும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திரசிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும், ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார். மகசேசே விருது பெற்றவர். அவரதுஅனுபவத்தின் மூலம் தாமிரபரணியை தூய்மைப்படுத்த ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம். இப்பணிக்கு திண்டுக்கல்லில் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை பெற அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Thamirabarani River ,Rajasthan Water Conservation Expert ,Commissioner ,HC ,Madurai ,Kamaraj ,Thoothukudi ,G.R. Swaminathan ,P. Pugazhendi ,Nellai Corporation ,
× RELATED பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு...