செங்கம்: செங்கம் அருகே குடிசையில் படுத்து தூங்கிய விவசாயி, அவரது 2வது மனைவி ஆகியோர், குடிசையுடன் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(51), விவசாயி. மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரது மனைவி தமிழரசி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழரசி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சக்திவேல், தீர்த்தாண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார்.
சக்திவேல் மற்றும் அவரது 2வது மனைவி அமிர்தம் ஆகியோர் அப்பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் ஓலைக்குடிசை கட்டி அதிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் சக்திவேல், அமிர்தம் இருவரும் நேற்றிரவு விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவு யாரோ மர்ம ஆசாமிகள், குடிசையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். பின்னர் அந்த குடிசை மீதும், வீட்டுக்குள்ளேயும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பற்றி எரிந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்த சக்திவேல், அமிர்தம் ஆகியோர் அலறியபடியே வெளியே ஓடி வர முயன்றுள்ளனர். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே வர முடியவில்லை. இதனால் தீயில் சிக்கிய அவர்கள் அங்கேயே கருகி இறந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற விவசாயிகள் குடிசையுடன் இருவரும் கருகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் கரிக்கட்டையான உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.
