திருவனந்தபுரம்: ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் இளம்பெண்ணை உல்லாச விடுதிக்கு வரவழைத்து பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கட்டிப்பாறை என்ற பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (51). இவர் பல்வேறு நோய்களை ஆன்மிக முறையில் குணமாக்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமானோர் செல்வது உண்டு. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு 35 வயதான இளம்பெண் அப்துல் ரகுமானிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அருகில் கோட்டப்படி என்ற இடத்திலுள்ள ஒரு உல்லாச விடுதிக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.
இதன்படி அங்கு சென்ற அந்த இளம்பெண்ணை அப்துல் ரகுமான் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த இளம்பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் அப்துல் ரகுமான் அவரை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார். இதை தொடர்ந்து அந்த இளம்பெண் மேப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
