×

வங்கியில் ரூ.5.7 கோடி கடன் மோசடி; தனியார் நிறுவன அதிபர்கள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: போலியான ஆவணங்களை கொடுத்து கடன் வாங்கி வங்கிக்கு ரூ.5.7 கோடி இழப்பை ஏற்படுத்திய வழக்கில் தனியார் நிறுவன அதிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள டி.என்.இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா. இவரது நிறுவனத்தில் இயக்குநர்களாக இருப்பவர்கள் கேத்தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்வின் ஷா. இந்த நிறுவனத்தின் சார்பில் ஆழ்வார்பேட்டை மவுபரிஸ் சாலையில் உள்ள ஆந்திரா வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளிநாடுகளிலிருந்து வைரங்களை ரூ.2 கோடி அளவுக்கு வாங்குவதற்காக தங்கள் நிறுவனத்திற்கு கடன் கேட்டு வங்கியிடம் கேத்தன் ஷா விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தலைமை மேலாளர் பங்கஜா, மூத்த மேலாளர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி ஆகியோர் முதல் கட்டமாக ரூ.1 கோடி கடன் கொடுத்தனர். பின்னர், மீண்டும் ரூ.2 கோடி கடன் கொடுத்தனர். தொடர்ந்து நிறுவனம் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி மீண்டும் ரூ.2 கோடி கடன் கேட்டு வங்கிக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி அதிகாரிகள் மேலும் ரூ.2 கோடி கடன் கொடுத்தனர்.

இதனிடையே, சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு போதிய வியாபாரம் இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் முதலீடு மற்றும் வர்த்தகம் சரியில்லை என்றும் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. வங்கியில் தனியார் நிறுவன இயக்குநர்களின் கடன் மேலாண்மை மிக மோசமாக இருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் வங்கிக்கு ரூ.5 கோடியே 75 லட்சத்து 67 ஆயிரத்து 108 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கடன் கேட்ட நிறுவனத்தின் ஆவணங்களையும், சொத்துகளையும் சரியாக ஆய்வு செய்யாமல் கடன் கொடுக்க ஒப்புதல் தந்த வங்கியின் மதிப்பீட்டாளர் விலாஸ் பர்தாபுர்கர், வங்கியின் தலைமை மேலாளர் பங்கஜா, மூத்த மேலாளர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி, ஐதராபாத் கிளையின் மூத்த மேலாளர் அர்ச்சனா ஷா, டி.என்.இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா, இயக்குநர்கள் கேத்தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்வின் ஷா, சொத்து மதிப்பீட்டாளர் விலாஸ் பர்தாபுர்கர், நிறுவனத்தை சேர்ந்த வினய் ஷா, சஞ்சீவ் சந்ரகாந்த் ஷா, மற்றும் டி.என்.இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகியோர் மீது ஆந்திரா வங்கி சார்பில் சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் மோசடி, கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் 11 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் ஜி.அர்ஜுனன் ஆஜரானார். விசாரணை காலத்தில் வங்கியின் தலைமை மேலாளர் எஸ்.வி.எஸ்.மூர்த்தியும், 11வது குற்றவாளியான சஞ்சீவ் சந்தரகாந்த் ஷாவும் இறந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் டி.என்.இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா, இயக்குநர்கள் கேத்தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்வின் ஷா ஆகியோருக்கு 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மொத்தம் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை புகார் தந்த வங்கியிடம் தர வேண்டும். தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத்தை கட்ட தவறினால் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். மற்றவகள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.

Tags : Chennai CBI Special Court ,Chennai ,Tenampettai ,
× RELATED போலி நகை அடமானம் வைத்து ரூ.82 ஆயிரம் மோசடி: மர்ம நபருக்கு போலீஸ் வலை