துரைப்பாக்கம்: திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், 17 வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்தனர். திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூட்டையுடன் வந்த 2 வடமாநில இளைஞர்களிடம் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தபோது 8 கிலோ கஞ்சா சிக்கியது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாஜகான்(23) மற்றொருவர் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரும் மேற்கு வங்கத்திலிருந்து கஞ்சாவை கடத்தி பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து முகமது ஷாஜகானை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
