சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக ஆயுதப்படை பெண் காவலரின் கணவன் உள்பட தனியார் மருத்துவ கல்லூரி மாணவனை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிலர் மருத்துவ கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேரடி ெதருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் பைக்கில் வந்து சுற்றினர். இதை கவனித்த போலீசார் அதிரடியாக 2 பேரை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
உடனே 2 பேரையும் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் (27) என்றும், இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பிரபாகரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்து தற்போது சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. பிரபாகரன் கடந்த சில மாதங்களாக தர்மபுரியை சேர்ந்த சரண் என்பவரிடம் போதை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து தனது நண்பரான கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வரும் சேலையூர் மப்பேடு சாலையை சேர்ந்த ஹரிசுதன் (23) என்பவருடன் இணைந்து மருத்துவ கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பிரபாகரன் அளித்த தகவலின்படி தனியார் மருத்துவ கல்லூரி மாணவன் ஹரிசுதனை போலீசார் கைது செய்தனர். பின்னர் பிரபாகரன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக போதை பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். அதைதொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 50 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 9 போதை மாத்திரகள், 50 கிராம் கஞ்சா, 1 கஞ்சா பேஸ்ட், போதை பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரபாகரன் தனது மணைவியான ஆயுதப்படை பெண் காவலருக்கு தெரியாமல், ரகசியமாக திருமணத்திற்கு முன்பு இருந்தே கமிஷன் அடிப்படையில் போதை பொருட்களை மருத்துவ மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது செல்போன் உரையாடல்கள் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜிகளை வைத்து போதை பொருள் பயன்படுத்திய மாணவர்கள் தொடர்பான விவரங்களை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
