பெரம்பூர்: சூளை ஆலந்தூர் சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் சந்திலால்(58). கடந்த 42 ஆண்டுகளாக சூளை அங்காளம்மன் தெருயில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் 12 கிராம் எடை கொண்ட ஜிமிக்கி கம்மல் ஒன்றை அடமானம் வைத்து ரூ.82 ஆயிரம் பெற்றுச் சென்றார். அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. சிறிது நேரம் கழித்து குறிப்பிட்ட தங்க நகையை அடகு கடைக்காரர் சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அடகு கடை உரிமையாளர் சந்திலால் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோசடியாக பணம் பெற்றுச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
