×

எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பரபரப்பு பிரசார வாகனத்தில் மாவட்ட செயலாளர் திடீர் மயக்கம்: கண்டுகொள்ளாததால் தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பரப்புரை வாகனத்தில் இருந்த மாவட்ட செயலாளர் திடீரென்று மயங்கி விழுந்தார். அதனை கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்ததை கண்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரப்பேட்டையில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தனர்.

பிரசாரத்தின்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்த பஸ்சில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரசார வாகனத்தில் வலதுபுறத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சிறுணியம் பலராமனும், இடதுபுறத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரும் நின்றிருந்தனர். எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சிறுணியம் பலராமன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் மயங்கியதையே கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா, சிறுணியம் பலராமனை தாங்கிப் பிடித்து பேருந்திற்குள் அனுப்பினார். சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீரவாள் பரிசளித்தார். தமக்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் மயங்கியதை கூட கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமியின் செயல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : District Secretary ,Edapadi ,Palanisami ,Chennai ,Edappadi Palanisami ,Thiruvallur District Kummidipundi ,
× RELATED சொல்லிட்டாங்க…