×

6 தொகுதிகள் கேட்ட நிர்வாகிகள்: 5 நிமிஷம் இந்தியில் பாட்டு பாடி முடித்த ஒன்றிய அமைச்சர்

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக குமரி மாவட்ட ஒருங்கிணைந்த பாஜ சட்டமன்ற தொகுதி மையக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்துகொண்டார். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற கருத்தை தெரிவிக்க தொகுதிக்கு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என பல்வேறு புள்ளி விபரங்களுடன் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனை குறிப்பெடுத்து கொண்ட அர்ஜூன் ராம் மேக்வால், இந்தியில் சிவபெருமான் பற்றிய பாடலை 5 நிமிடங்கள் பாடி, இந்த பாடல் உங்களுக்கு உத்வேகம் தரும். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எனவே, அனைத்து தொகுதிகளிலும், மோடி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என இரண்டே வார்த்தைகளில் பேசி கூட்டத்தை முடித்து புறப்பட்டு சென்றாராம். வழக்கமாக இதுபோன்ற மையக்குழு கூட்டம், சக்தி கேந்திரா கூட்டம் தொடங்கினால், எப்போது முடியும் என்றே தெரியாது. பல மணி நேரம் இந்த கூட்டங்கள் குமரியில் நடைபெறும். ஆனால், ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கூட்டத்திற்கு வர பல மணி நேரம் தாமதம் ஆனதால் ஒரு பாட்டு பாடி கூட்டத்தை இரண்ேட வார்த்தையில் முடித்து விட்டு சென்றுவிட்டார்.

* ஓட்டுக்கு தூண்டில் தங்கம் தரும் ‘தங்கம்’
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம், நகரம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி எம்எல்ஏ, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று கூற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த கூட்டத்தில் ராசிபுரம் ஒன்றிய பகுதியை சேர்ந்த கிளை, வார்டு பொறுப்பாளர்கள், பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளாததால் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது ஆவேசமடைந்தார்.

அதேநேரத்தில், ‘‘நாங்கள் எதிர்பார்ப்பது நடந்தால், நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும். வேட்பாளர் யாரென்று கவலைப்பட வேண்டாம். இங்கே நிற்பவர் யார்? என்றும் கவலைப்பட வேண்டாம். எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர், மாவட்ட செயலாளர் என்று யார் நின்றாலும் தேர்தல் முடிந்த பிறகு, பேசிக்கொள்ளலாம். எனவே ஒவ்வொருவரும் அவரவர் பூத்தில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். மேலும் இங்கு வந்துள்ள ஒன்றிய, பேரூர் செயலாளர்களுக்கு ஒன்றை சொல்கிறேன். எந்த ஒன்றியம், பேரூரில் எந்த பூத்தில் அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறீர்களோ, அந்த பூத் நிர்வாகிக்கு மாவட்ட கழகம் சார்பில் ஒரு பவுன் கொடுக்கப்படும் என்பதையும் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,’’ என்றும் ஆசை காட்டி தூண்டில் போட்டார்.

* தில், திராணி இருந்தா பிரஸ் மீட்டை சந்தி பார்ப்போம்… ஸ்கிரிப்ட்டை பார்த்து நடிக்குறதோட இருக்கணும்! வீணா வாங்கி கட்டிக்காத… விஜய்க்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து பேசுவது ரொம்ப எளிது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே விஜய் ஒரு கைதேர்ந்த நடிகர். அவருக்கு சொல்லித்தர தேவையில்லை. எப்படியெல்லாம் உடல் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதை அவரால் வெளிப்படுத்த முடியும். ஒரு தடவையாவது பிரஸ்சை மீட் பண்ண வேண்டும். நிருபர்கள் என்ன கேள்வி கேட்டாலும், நான் பதில் சொல்கிறேன். அதேபோன்று விஜய் நிருபர்களிடம் பேச சொல்லுங்கள் பார்ப்போம். அதற்கு ஒரு தில், திராணி வேண்டும். இவருக்குத்தான் தில், திராணி இருக்கிற மாதிரி, எழுதிக்கொடுக்கும் ஸ்கிரிப்டை, அதாவது டைரக்டர்கள் ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் எழுதி கொடுப்பதை பேசி நடிக்கும் ஒரு நடிகர் விஜய். அவரை அதிமுக அப்படித்தான் பார்க்கிறது.

திமுக கூட்டணி கட்சிகளை சென்னை, அறிவாலயத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அதிமுக கூட்டணி பற்றி பேச டெல்லி செல்வது ஏன்? என்று கேட்கிறீர்கள். ஒரு கூட்டணி கட்சி என்பது ஒரு பரஸ்பர பரிமாற்றங்கள் இருக்கும். அப்படித்தான் பார்க்க வேண்டும், ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது. அதேபோன்று, அதிமுக கூட்டணி கட்சிகள், நாங்கள் பாஜகவோடு தொகுதியை கேட்டு பெறுவோம் என்று சொல்வதாக கேட்கிறீர்கள். இதுபற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெளிவுபடுத்தி விட்டார். அதன்பிறகு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. தொகுதி பங்கீடு குறித்த நேரத்தில் நடைபெறும். விஜய், ஆரம்பத்தில் என்ன சொன்னார். எங்கள் கூட்டணிக்கு வாங்க, ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு தருவோம் என்றார். ஒருத்தரும் தவெகவுடன் கூட்டணிக்கு போகவில்லை. அதன் விளைவு, இப்போ ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி கடைசியில மனுஷன கடிக்கிற கதையா எங்க பக்கம் (அதிமுக) திரும்பி இருக்கிறார். எங்க பக்கம் திரும்பினால், வீணாக வந்து வாங்கி கட்டிக்கிற நிலைமைதான் நிச்சயமாக தவெகவும், விஜய்க்கும் ஏற்படும்.இவ் வாறு அவர் கூறினார்.

* ஈரோட்டில் தாமரைக்கு 2
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போதைய 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர். அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம் கடந்த முறை ஈரோடு மேற்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் இந்த முறை மொடக்குறிச்சி தொகுதி அல்லது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளதோடு கட்சி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இதையறிந்த பாஜ நிர்வாகிகள், மொடக்குறிச்சி சிட்டிங் தொகுதி என்பதால் கொடுக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டனர். அதேசமயத்தில் ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக ஒரு தொகுதி அதாவது ஈரோடு மேற்கு தொகுதியையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும், ஈரோடு மேற்கு தொகுதியை கூட்டணி கட்சியான பாஜ.வுக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாஜ மகிழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

* திருச்சிக்கு 11ம் தேதி பிரதமர் மோடி வருகை
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்துக்கு விசிட் அடித்து வருகிறார். ஏற்கனவே, மதுராந்தகம் மற்றும் மதுரையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், வரும் 11ம்தேதி திருச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்துக்கு திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே உள்ள 25 ஏக்கரான இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு நேற்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

Tags : Minister ,Kumari District ,BJP Legislative Constituency ,Central ,Committee ,Assembly elections ,Nagercoil ,Union Minister ,Arjun Ram Meghwal ,
× RELATED அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!