×

அது எப்படி குமாரு! இப்படி நடிக்குறீங்க… தஞ்சை மண்ணில் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைக்கு விஜய் போட்ட நாடகம்: ஒன்றிய அரசை கேள்வி கேட்டா சிபிஐ வரும்ன்னு பயமா? நெட்டிசன்கள் கிண்டல்

தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று தஞ்சையில் நடந்ததால், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பற்றி விஜய் பேசினார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை பற்றி பேசிய விஜய், ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் மட்டும்தான் எழுதுகிறார். அழுத்தம் கொடுக்கவில்லை என்று சொன்னார். ஆனால், நாடாளுமன்றத்திலும், ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் திமுக எம்பிக்கள் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னை குறித்து அழுத்தம் கொடுக்கின்றனர். இருப்பினும், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மவுனமாக வேடிக்கை பார்த்து வருகிறது.

மீனவர்கள் வாழும் பகுதிக்கு செல்லும் ஒன்றிய அமைச்சர்கள், ‘நாங்கள்தான் மீனவர்களின் பாதுகாவலன்’ என்று சொல்வார்கள். அதன்பின் அவர்களை மறந்துவிடுவார்கள். மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவார்கள். மீனவர்களுக்காக நான் இருக்கும் சொல்லும் விஜய், கட்சி தொடங்கி இதுவரை ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கூட இந்த பிரச்னை குறித்து பேசவில்லை. ஆனால், திமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. நேரிலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், மீனவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் விஜய்யிடம் பாரபட்சம் உள்ளது. சமீபத்தில் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மட்டும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால், ராமேஸ்வரம் மற்றும் மற்ற மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வாய் கூட திறப்பதில்லை. இதேபோல், விவசாயிகள் பிரச்னை பற்றி பேசினார். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால், இதை பற்றி ஏதுவும் பேசாமல், டிவிகே ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னையை தீர்க்க வேண்டியது ஒன்றிய அரசு. ஆனால், திமுக அரசு மீது விஜய் பழி போடுகிறார். பிரச்னைக்கு யார் பொறுப்பு, யார் தீர்க்க வேண்டும் என்பது கூட தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் எழுதி கொடுக்கும் ஸ்கிரிப்பிட்டை அப்படியே வாசித்து, நடித்துவிட்டு சென்று உள்ளார். உச்ச நடிகர் இப்போ நடிப்பு அரக்கனாக மாறிவிட்டார். மீனவர்கள், விவசாயிகள் பிரச்னையில் ஒன்றிய அரசை நேரடியாக தாக்கினால், நாளைக்கு சிபிஐ நம்மை தாக்கும் என்று பயம் விஜய்க்கு வந்துவிட்டது என நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.

* முதல்வருக்கு விஜய் நன்றி
நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘நம்ம ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்னைல நிறையப்பேரு குரல் கொடுத்தாங்க… முக்கியமா, நம்ம முதல்வர் அவர்கள் கூட குரல் கொடுத்தாங்க… அவங்களுக்கும், மத்தவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்’ என்றார்.

* கோடை மழை போல் குளிர்விக்கும் கட்சிக்கே எங்களின் ஆதரவு: மன்சூர் அலிகான் லக… லக…
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் எனக் கேட்கிறார்கள். எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எங்களுடைய ஆதரவு, கோடை மழையை போல தமிழ்நாட்டை குளிர்வித்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் கட்சிக்கே இருக்கும். தமிழர் நலனுக்கு புறம்பான கட்சிகளை எதிர்த்து எங்களது தாக்குதல்கள் வெகுதூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கிற ஏவுகணைகளைப் போன்றே இருக்கும். இரு மொழிக்கொள்கை அடிப்படையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். நீட் முறையை ஒழிக்க வேண்டும். கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும். மதுக்கடைகளை மூடிவிட்டு, கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். டோல்கேட் வரி வசூலிக்க கூடாது. இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜக தலைவர்) சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

Tags : Kumaru ,Vijay ,Thanjavur ,CBI ,Union government ,Thaveka ,Sri Lankan Navy ,
× RELATED அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!