×

சுயேச்சையாக களமிறங்குவேன் மாஜி மந்திரியை பழிக்குப்பழி வாங்க துடிக்கும் மாஜி எம்எல்ஏ

அதிமுகவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் மாஜி மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி. வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால் 2015ல் இவரது மந்திரி பதவி பறிபோனது. ஜெயலலிதா இருந்தவரை அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்க முடியவில்லை. 2016ல் சீட்டும் கிடைக்கவில்லை. எடப்பாடி வந்தபிறகுதான் மீண்டும் இவரால் தலைதூக்க முடிந்தது. இப்போது, அக்ரி சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் போளூர் தொகுதியை, கூட்டணியான பாஜ தட்டிப்பறிப்பது முடிவாகி விட்டதாம். அதனால், கலசபாக்கம் தொகுதிக்கு தாவ அக்ரி திட்டமிட்டுள்ளார். ஆனால், கலசபாக்கத்தில் கடந்த 2021 தேர்தலில் உள்ளடி வேலை செய்து அக்ரி குழி பறித்த கோபம், அதிமுக மாஜி எம்எல்ஏ பன்னீர்செல்வத்துக்கு இன்னும் குறையவில்லையாம்.

அதனால், இந்த தேர்தலில் கலசபாக்கத்தில் அக்ரி களமிறங்கினால், பழிக்கு பழி வாங்குவேன், அதற்காக சுயேச்சையாகவும் களமிறங்குவேன் என சபதம் எடுத்திருக்கிறாராம். எப்போதும் திமுகவுக்கு ஸ்ட்ராங்கான தொகுதி என பெயர் பெற்ற கலசபாக்கத்தில், அதிமுக இரண்டு கோஷ்டியாக களமிறங்கினால் கிடைக்கிற ஓட்டும் கிடைக்காதே என அக்கட்சியினர் புலம்புகின்றனர். ஏற்கனவே, பாஜவோடு சேர்ந்ததால் மக்களிடம் கோபம் இருக்கிறது. இப்போது, தொகுதிக்கு தொகுதி கோஷ்டி பூசல் தலைவிரித்தாடினால் இந்த தேர்தலை எப்படித்தான் நகர்த்த போகிறோமோ என அதிமுகவின் கடைநிலை தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

* ஒரே கல்லில் 2 மாங்காய்: வாரிசுக்கு சீட் நயினார் புது ரூட்
பாஜவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் யாரும் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெறவில்லை என்பதால், நாங்குநேரி அல்லது சாத்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என நயினார் சர்வே எடுத்தார். ஆனால், அங்கு எதிர்ப்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் குழப்பத்தில் உள்ளார். தற்போது தான் மாநில தலைவராக இருப்பதால் பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த முறை நெல்லை தொகுதியில் அவரது மகன் நயினார் பாலாஜியை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் வாரிசுக்கும் தேர்தல் என்ட்ரி கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு தானும் ஏதாவது ஒரு மாநிலத்தில் ராஜ்யசபா எம்பி வாங்கிக் கொண்டு ஒன்றிய அமைச்சராகி விடலாம் என்று ஒரே கல்லில் 2 மாங்காய் திட்டத்தை போட்டு வருகிறாராம். தாம் மாநில தலைவராக இருக்கும் போதே மகனை தேர்தலில் நிற்க வைத்து விடலாம் என்ற முடிவுக்கு நயினார் வந்துள்ளார். இதனால் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனின் வாரிசு களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிமுகவினரை சோர்வடைய வைத்துள்ளது.

* அதிமுகவினர் 80% பேர் திமுகவில் இணைவார்கள்: ஓபிஎஸ் உறுதி
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் நாளைமறுநாள் (மார்ச் 7) நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த இணைப்பு விழாவிற்கான கால்கோள் விழா நேற்று மதுரை – விருதுநகர் நான்குவழிச் சாலையில் ராயபாளையம் பிரிவில் நேற்றுகாலை நடைபெற்றது.

விழாவுக்குப் பிறகு ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 7ம் தேதி திருமங்கலம் அருகே நடைபெறும் இணைப்பு விழாவில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இணைகின்றனர். அதிமுகவில் இருந்து 80 சதவீதம் பேர் விலகி திமுகவில் இணைகின்றனர். தாயன்புடன் எங்களை அரவணைத்து கட்சியில் இணைத்துக்கொண்ட தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதல்வர் தளபதி நடத்தி கொண்டுள்ளார்.

இந்நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பட்ட மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து வருகின்றனர். இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை ஆட்சி மீண்டும் வரவேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் 70 முதல் 80 சதவீதத்திற்கும் மேல் திமுகவில் இணைகின்ற சூழ்நிலை அமைந்துள்ளது. மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Maji MLA ,Maji Mantri ,Majhi Mantri ,Akri Krishnamoorthy ,Atamugat ,Jayalalitha ,
× RELATED கேப்டன் பினராயிதான் ஆனால் முதல்வர்… பொடி வைத்த மார்க்சிஸ்ட்