×

கேப்டன் பினராயிதான் ஆனால் முதல்வர்… பொடி வைத்த மார்க்சிஸ்ட்

கேரளாவில் இதுவரை எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை. இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் தான் இதுவரை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதேபோல் கேரளாவில் இதுவரை எந்தக் கூட்டணியும் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி செய்யவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்து இப்போது 10 வருடங்களை நிறைவு செய்து விட்டது. இந்த சாதனை தொடரும் என்றும், கேரளாவில் பினராயி விஜயனின் 3.0 அரசு அமையும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியுடன் கூறி வருகின்றனர்.

பினராயி விஜயனை மீண்டும் இந்தத் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றவர்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்ற சிபிஎம்மின் நிபந்தனையை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற அதே தர்மடம் தொகுதியில் தான் இந்தத் தேர்தலிலும் பினராயி விஜயன் போட்டியிட உள்ளார். மார்க்சிஸ்ட்டில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பலருக்கு இம்முறை அதே தொகுதி கொடுக்கப்படாது என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரான ஷைலஜா கடந்த தேர்தலில் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

இவர் தான் கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் இம்முறை இவருக்கு இந்தத் தொகுதி வழங்கப்படமாட்டாது என்று தெரிகிறது. கடந்த முறை இடது சாரி கூட்டணி வெற்றி பெற்றபோது ஷைலஜாவுக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று சிபிஎம்மில் சிலர் குரல் எழுப்பினர். அதேபோல இம்முறையும் குரல் எழாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஷைலஜாவை காங்கிரஸ் கோட்டையான கண்ணூர் மாவட்டத்திலுள்ள பேராவூர் தொகுதியில் நிறுத்த ஆலோசித்து வருகின்றனர். இது ஷைலஜாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறுகையில், ‘‘கேரளாவில் சிபிஎம்மில் வேட்பாளர்கள் தேர்வு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முதல் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். இம்முறையும் கேரளாவில் இடதுசாரி கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்கு பினராயி விஜயன் தான் கேப்டனாக இருப்பார். ஆனால் யார் முதல்வர் என்பதை இப்போது கூற முடியாது. அது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும். வெற்றி பெற்ற பின்னர் தான் யார் முதல்வர் என்பது தீர்மானிக்கப்படும்’ என்றார்.

* நோ அப்பாயிண்மென்ட் கெட் அவுட்… ‘லாட்டரி’யை விரட்டிய ‘சாமி’: சிபாரிசு செய்யும் பாஜவுக்கும் குட்டு
புதுச்சேரியில் வரும் தேர்தலில் என். ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக அடங்கிய தேஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்த லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கட்சியை (லஜக) சேர்க்க கூடாது என ரங்கசாமி பிடிவாதம் காட்டுகிறார். புதுச்சேரி பாஜ பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, லஜகவை வெளியில் விடக்கூடாது, அது நமக்குத்தான் பாதகத்தை ஏற்படும் எனக்கூறி ரங்கசாமியை சமாதானம் செய்து வருகிறார். ஆனால் ரங்கசாமி மசியவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் ஜோஸ் சார்லஸ் மார்டினை அழைத்து உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் ரங்கசாமியை நேரடியாக சந்தித்து சமாதானம் ஆகிவிடுங்கள் எனக்கூறியுள்ளார். உடனே ரங்கசாமிக்கு நன்கு அறிமுகமான மணவெளி சுரேஷ் மூலம் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் சார்லஸ். ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, ஜோஸ் சார்லஸ் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு, ‘‘இனிமேல் இது தொடர்பாக என்னிடம் பேச வரவேண்டாம். அப்பாயின்மென்ட் கிடையாது. இந்த ஊரை பத்தி அவருக்கு (ஜோஸ் சார்லஸ்) என்ன தெரியும்.

வாய்க்கு வந்தபடியெல்லாம் என்னை விமர்சித்துவிட்டு இப்போது என்ன சமாதானம் வேண்டிக்கிடக்கிறது. என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். வெளியூர்காரரை கூப்பிட்டு வந்து புதுச்சேரி உள்ள விடலாம்னு பாக்குறியா, அப்படி செய்வதாக இருந்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபா சீட்டை கேட்ட வெளியூர்காரர்களுக்கு நான் சீட்டை விற்றிருக்கலாம். நான் அப்படி செய்யவில்லை. எனவே நீங்கள் நடையை கட்டுங்கள்’’ என கூறி ரங்கசாமி அனுப்பியிருக்கிறார்.

அதே நேரத்தில் போன் செய்த பாஜ பொறுப்பாளரிடம், ‘‘நீங்கள், நான் சொல்றத கேட்கிற மாதிரி தெரியவில்லை. எனவே உங்க விருப்பப்படி, பாஜ, லஜக, பாகூரில் ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்திய மூர்த்தியின் செங்கோல் மக்கள் கட்சி ஆகியவற்றோடு பிரமாண்ட கூட்டணி அமைத்து தேர்தலை சந்தியுங்கள். என்னை விட்டுவிடுங்கள். அதற்காக நான் பாஜவை எதிர்த்து அரசியல் செய்ய மாட்டேன். தேர்தலில் பங்கேற்காமல் கோயில் குளம் என்று சென்றுவிடுவேன். வெளியில் மாநில அந்தஸ்து கொடுத்தால்தான் கூட்டணி என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்வேன்’’ என கூறியுள்ளார்.

* அசத்தும் பெண்கள் திட்டங்கள் நம்பிக்கையுடன் முதல்வர் மம்தா
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் பத்தாண்டு ஆட்சி அரசியல் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில் மாநிலத்தில் பெண்களின் பங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று, பெண்கள் வாக்காளர்களாகவும் அவரது தீவிர ஆதரவாளர்களாகவும் மட்டுமல்லாமல், கொள்கை திசையை வடிவமைக்கும் சமூக மற்றும் பொருளாதார சக்திகளாகவும் உருவாகி வருகின்றனர். ரூபா திட்டத்தின் கீழ், 22.02 லட்சம் பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது ரூ.25,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மாநில அரசு ரூ.5,558.66 கோடியை செலவிட்டுள்ளது. கன்யா திட்டம் பெண் கல்விக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் கீழ், கிட்டத்தட்ட 1 கோடி பெண் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது, இதற்கு ரூ.16,554 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேற்குவங்கத்தில் பெண் கல்வி மற்றும் இடைநிற்றலைத் தடுப்பதற்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
பெண்களுக்குச் சொந்தமான சிறுகுறு தொழில்களைப் பொறுத்தவரை தேசிய அளவில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. இது நாட்டின் பெண்களுக்குச் சொந்தமான சிறுகுறு தொழில் நிறுவனங்களில் 23.42 சதவீதமாகும்.

மேலும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் துன்பப்படும் பெண்களுக்கு ‘முக்திர் ஆலோ யோஜனா’ திட்டத்தின் கீழ் அரசு தொழில் பயிற்சியையும் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்காக 2025 வரை ரூ.1.47 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான பெண்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுயசார்புக்கான வாய்ப்பை வழங்குகிறது. லட்சுமி பந்தர் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1500 நிதி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் தாக்கம் சமூக மாற்றத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. தேர்தல் அரசியலிலும் பெண்கள் தீர்க்கமான வாக்காளர்களாக உருவெடுத்துள்ளனர். அதுவும் முதல்வர் மம்தாவின் ஆதரவு வாக்குகளாக மாறியுள்ளன. மம்தாவை தங்களின் அதிகார சக்தியாக, மையமாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால் மேற்குவங்கத்தில் மம்தா நம்பிக்கையுடன் உள்ளார்.

* அசாம் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்
அசாம் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்து அதிரடி காட்டியது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தொகுதி பங்கீடு முடிவதற்குள் தனியாக காங்கிரஸ் கட்சி பட்டியல் அறிவித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அகில் கோகாய் தலைமையிலான ராய்ஜோர் தளம் கட்சி, 11 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதற்கான முதல் படி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஏனெனில் காங்கிரசில் இருந்து விலகியவர்களுக்கும் இந்த பட்டியலில் அகில் கோகாய் இடம் கொடுத்துள்ளார். முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சொந்த தொகுதியான ஜலுக்பாரி தொகுதியில் ராய்ஜோர் தளம் கட்சியின் செயல் தலைவர் ரோமன் சந்திர போர்தாகூர் நிறுத்தப்பட்டுள்ளார். மார்கெரிட்டா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ராய்ஜோர்தளம் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அகில் கோகாய் பெயர் முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.

* 126ல் 103ல் பாஜ போட்டி அசாம் முதல்வர் அதிரடி
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதனால் பா.ஜவும் தனது நிலையை 90ல் இருந்து 103 தொகுதியாக உயர்த்தி விட்டது. மொத்தம் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில் 103 இடங்களில் பாஜ போட்டியிடும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா அறிவித்து விட்டார். மீதம் உள்ள இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

Tags : Pinarayi ,Chief Minister… ,Kerala ,Left Alliance ,Congress Alliance ,
× RELATED சுயேச்சையாக களமிறங்குவேன் மாஜி...