×

இன்ஸ்டா. காதல் தோல்வி; இன்ஜி. மாணவி தற்கொலை: திருச்சி அருகே சோகம்

 

திருவெறும்பூர்: திருச்சி அருகே இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி அடைந்ததால், இன்ஜினியரிங் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீப ரோஷினி (19). இவர் திருச்சியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாலை வீட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார். இந்நிலையில் தீபரோஷினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். இந்த வலைதளம் மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். பின்னர் அவரை மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபரோஷினியின் தாய் ஜானகி நேற்று மாலை பெல் மருத்துவமனைக்கு சென்று விட்டார். அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் ஜானகி மகளின் செல்போனுக்கு போன் செய்தார். நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது தீபரோஷினி சேலையால் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை கீழே இறக்கினார். பின்னர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபரோஷினி உடலை பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலன் ஏமாற்றியதால் தீப ரோஷினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy ,Thiruverumpur ,Venkatesan ,Vengur Nadutheru ,Thiruverumpur, Trichy ,Deepa Roshini ,Trichy… ,
× RELATED 13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு...