×

13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு தூக்கு தண்டனை; நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: 10 மாதங்களில் வழக்கை முடித்த போலீசுக்கு பாராட்டு

நெல்லை: நெல்லை அருகே 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவருக்கு 14 வயதில் மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், கடந்த ஆண்டு நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தந்தையே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து செய்து, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிட்டனர். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதற்கு காரணம் அவரது தந்தை என சிறுமி தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அவரது கணவர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பிப். 17ம் தேதியன்று சிறுமிக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக, மறுநாளே அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து பாளை. சிறையில் அடைக்கப்பட்ட சிறுமியன் தந்தை மீது கடந்த மார்ச் 15ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கை நெல்ைல போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் நேற்று 76 பக்கம் தீர்ப்பை வாசித்தார். அதில், அரிதிலும் அரிதான வழக்கு’. தந்தை என்பவர் தனது குழந்தைக்குப் பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்க வேண்டியவர்.

ஆனால் இந்த வழக்கில் அவரே குற்றவாளியாகி தனது மகளின் நம்பிக்கையை சிதைத்து, கொடுமைப்படுத்தி உள்ளார். இது குடும்ப உறவின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் செயல் மட்டுமல்லாமல் சமூக மனசாட்சியையே உலுக்கும் செயலாகும். இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை முடிவு மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு, அவரது தந்தை தான் காரணம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என் தந்தை எனது குழந்தை பருவத்தை அழித்து விட்டார்.

அவருக்கு கருணை காட்டக்கூடாது என்று சிறுமி அளித்த வாக்குமூலம் மிகவும் வேதனைக்குரியது. இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்க முடியும். குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது. எனவே, சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்தக்கப்படுகிறது.

ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 10 மாதங்களில் தீர்ப்பு வாங்கி கொடுத்த போலீசாரை எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.

* நீதிபதி அளித்த 3வது தூக்கு
நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், ஏற்கெனவே நெல்லை தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது இரு சமூகத்தினர் மோதலில் தென்காசி, திருவேங்கடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு கடந்த ஆண்டு செப்.26ம் தேதி தூக்கு தண்டனை விதித்தார்.

அதே போல ஒரு கொலை முயற்சி வழக்கில் முக்கிய சாட்சியான வைகுண்டம் என்பவரை கொன்ற வழக்கில் லாரி டிரைவருக்கு கடந்த மார்ச் 6ம் தேதி தூக்கு தண்டனை விதித்தார். தற்போது போக்சோ நீதிமன்றத்தில் 3வது தூக்கு தண்டனை அளித்துள்ளார். அதே நேரத்தில் நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இதுவாகும்.

Tags : PADDY ,BOXO ,COURT SENSATIONAL VERDICT ,Nella ,Nella Poxo Special Court ,Nella district, Nanguneri ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு