கோவை: கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் வெளியிடும் முன் அரசியல் கட்சியினர் ஆலோசனை பெறப்பட்டது. இதில், திமுக, அதிமுக உள்பட 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், சிறப்பு முகாம் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்திலும் திமுக, அதிமுக உள்பட 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், கோவை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. குறிப்பாக, பூத் லெவல் ஏஜென்ட் 1, பூத் லெவல் ஏஜென்ட் 2 பட்டியலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடிகள் இருக்கிறது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
மாவட்ட நிர்வாகிகள், எந்த ஓட்டு சாவடிக்கும் பூத் கமிட்டி அமைக்கவில்லை. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க மக்களுடன் இறங்கி களத்தில் வேலை செய்யவில்லை. வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களையும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக கட்சியினர் 3117 ஓட்டு சாவடிகளுக்கும், காங்கிரஸ் 2271 ஓட்டு சாவடிக்கும், பாஜ 2851 ஓட்டு சாவடிக்கு, மா.கம்யூ., 751 ஓட்டு சாவடிக்கும், தேமுதிக 797 ஓட்டு சாவடிக்கும், நாம் தமிழர் கட்சி 106 ஓட்டு சாவடிக்கும் ஏஜென்ட் பட்டியல் தந்து ஏஜென்ட் கூட்டத்தில் பங்கேற்றனர்.இப்படி இருந்தால் நாங்கள் எப்படி அவர்களை அழைப்பது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் சலிப்படைந்துள்ளனர்.
