சென்னை: ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிடப்பட்டது. அதில் பல லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப் 4 தேர்வு அறிவிப்பு அக்டோபர் 6ல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது.
அதன்படி, வரும் 2026ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதுவோர் இடையே நிலவி வந்தது. இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 20ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 3ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25ம் தேதி தேர்வு நடத்தப்படும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
