புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மாத்திரைகள் தயாரித்து விற்ற ராணா, மெய்யப்பன் ஆகியோரை கடந்த மாதம் சிபிசிஐடி கைது செய்தது. இருவரிடமும் நடத்திய விசாரணையில், புதுச்சேரி, ஜெயா நகரில் வசித்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான ராஜா (எ) வள்ளியப்பன் 3 இடங்களில் போலி தொழிற்சாலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், மூலப்பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து, ஜெயா நகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், டைரி, ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கைப்பற்றினர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ராஜா மற்றும் அரியூர் விவேக் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் 10ம்தேதி சரணடைந்தனர்.
இதையடுத்து அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, புதுச்சேரியில் தொழிற்சாலை நடத்தி 18 மாநிலங்களில் சுமார் ரூ.1000 கோடிக்கு போலி மருந்து விற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளின் விஐபிக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு, லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக புதுச்சேரியில் மருத்துவமனை, மருந்தகத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் 6 பேர் கொண்ட குழு நேற்று காரைக்கால் சென்று அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மெடிக்கல்களில் திடீரென சோதனை நடத்தியது. காலாவதி மற்றும் போலி மருந்துகள் அங்கு விநியோகம் செய்யப்பட்டதா? என ஆய்வு மேற்கொண்டு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள போலி மருந்து விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. விரைவில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் வருமான வரித்துறை புதுச்சேரி வந்து விசாரணையை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதேபோல் ஆக்ரா, மிசாப்புரா உள்ளிட்ட வட மாநில போலீசாரும் புதுச்சேரி வந்து விசாரணை நடத்த உள்ளனர். இதனிடையே, சென்னை மாதவரத்தில் இயங்கும் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் மேலாளர் பாக்கியராஜ், நேற்று முன்தினம் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தங்கள் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 13 மருந்துகளை (பிராண்டுகள்) மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக, புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு துறை மூலம் தெரியவந்தது.
தங்களது நிறுவனத்தில் பதியப்பட்ட பிராண்ட், மருந்து பேக்கிங், பேட்ச் எண், வர்த்தக முத்திரை உள்ளிட்டவற்றை அனுமதியின்றி போலியாக பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, முக்கிய குற்றவாளியான ராஜா, விவேக் ஆகியோர் மீது பதிப்புரிமை சட்டம் பிரிவு 63, 65 மற்றும் பிஎன்எஸ் சட்டம் 276, 318 (4), 123 ஆகிய பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
