×

பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை ரூ.1000ல் இருந்து மேலும் உயரும்: வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பேருக்கு வழங்கப்பட்ட உரிமைத் தொகை மேலும், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு கூடுதலாக வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, இனி ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேருக்கு வழங்கப்படும் என்றும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மேலும் உயரும் என்றும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிற நகரங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. தோழி விடுதிகளில் தங்கி பயன்பெற்றுள்ள பயனாளிகள், விடுதிகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழல் குறித்தும் எடுத்துரைத்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசிற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ வசதிகளை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்கிடும் வகையில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக பயன்பெற்ற பயனாளிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த நிகழ்ச்சிக்கு வந்து மூன்று மணிநேரம் ஆகியிருக்கிறது. இங்கே பேசிய எல்லோருடைய பேச்சையும் கேட்டேன் என்று சொல்வதைவிட, நெஞ்சை உருக்குகின்ற, தன்னம்பிக்கையையும், புது நம்பிக்கையையும் கொடுக்கும் உங்களின் கதைகளை, பேச்சை கேட்டு, மகிழ்ச்சியில் என்று சொல்வதை விட, நெகிழ்ச்சியில் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருந்தோம். ஒருவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், தன்னுடைய 100 வயதில் நிறைவாழ்க்கை வாழ்ந்து, பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். மிகவும் பொருத்தமானவர், மற்றொருவர் இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன் எவ்வளவு சிறப்பாக பேசினார்கள்.

நம்முடைய லட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்” இத்்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பாலும், மாநிலத்தில் இருக்கின்ற மகளிர் மாதம் ஆயிரம் ரூபாயை பெறுகிறார்கள், விடியல் பயணத்தில், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மீதமாகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அந்த வகையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது. இப்படி திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்திக் கொள்கிறார்கள்.

இது நேரடியான பலன்கள் என்றால், கையில் காசு இருப்பதால் பெண்களுக்கு கூடும் சமூக மதிப்பு அந்த பணத்தால், சத்தான காய்கறிகளை வாங்குவது குழந்தைகளுக்கான கல்விக்கு செலவிடுவது என்று வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது. இங்கு பேசியதை எல்லோரும் கேட்டீர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், சுய உதவிக் குழுக்கள், வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், விளையாட்டு, தோழி விடுதிகள் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களால் பயனடைந்த “வெல்லும் தமிழ்ப் பெண்களாக” அவர்களின் வெற்றிக்கதைகளை சொல்லும்போது, திராவிட இயக்கத்தின் தொண்டனாக, எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது.

இந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்த திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்கிறேன் மக்கள்நல திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள். மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை, மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது.

இதையெல்லாம் நான் மேடை அலங்காரத்திற்காக, பெருமைக்காக சொல்கிறேன் என்று யாரும் கருதவேண்டாம். நாம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து, பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து, அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி ஊடகங்கள் பலவற்றில் தலையங்கங்களும் வந்திருக்கிறது, கட்டுரைகளும் வெளியாகியிருக்கிறது. இந்த ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு தொடக்கம் மட்டும் தான். பத்தாண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 16 விழுக்காடு ஜிஎஸ்டிபி பொருளாதார வளர்ச்சியை திராவிட மாடல் அரசு சாத்தியப்படுத்தியிருக்கிறது, இந்த வளர்ச்சியில் மகளிருக்கான பங்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரைக்கும் ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 சகோதரிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் என்று இதுவரைக்கும் 28 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சொன்னேன். அதற்காக, மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக, விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இன்றைக்கு காலையில், 16 லட்சத்து 94,339 பேருக்கு அக்கவுண்ட்டில் ரூ.1000 போட்டுவிட்டோம், இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தொடர்ந்து கிடைக்கும்.

தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும், உறுதியாக சொல்கிறேன் எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும் போது, “மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது” என்று தான் எழுதுவார்கள். கல்விதான் சிறந்த முதலீடு, யாராலும் அழிக்க முடியாத சொத்து, தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், அதற்கு பெண் கல்வியும் அவசியம், நீங்கள் முன்னேறி வந்து, சிறகடித்து பறக்க வேண்டும், ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும். அதற்கு, உங்கள் சகோதரனாக – உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கக்கூடிய காந்தியவாதி, சமூக சேவகி, 100 வயதை கடந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பத்மபூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், விளையாட்டு வீராங்கனை துளசிமதி முருகேசன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்திருக்கக்கூடிய பெண்கள், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி உள்ளிட்ட கலை உலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்.
* மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக, விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இன்று காலையில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டோம்.
* இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தொடர்ந்து கிடைக்கும்.

* என் சகோதரிகளுக்கான திட்டங்கள் திராவிட மாடல் 2.0விலும் தொடரும்
சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த வெல்லும் தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு:
திராவிட மாடலால் வெல்லும் தமிழ்ப் பெண்கள், மெய்சிலிர்க்க வைத்த மேடை, பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை இயக்குவது, ஐஎஸ்ஆர்ஓ-வில் செயற்கைக்கோளை ஏவுவது, மருத்துவமனைகளில் உயிர்காப்பது, கல்வியிலும் விளையாட்டிலும் சாதிப்பது, அரசின் உயர் பொறுப்புகளை நிர்வகிப்பது என எங்கும் நீக்கமற நிறைந்து, தமிழ்நாடு எனும் சக்கரத்தைச் சுழல வைப்பது பெண் எனும் பேராற்றலே.
திராவிட மாடல் Era என்பது மகளிர் முன்னேற்றத்தின் Golden Era என வரலாறு பதிவு செய்யும். என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் திராவிட மாடல் 2.0 விலும் தொடரும். இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

* ‘அப்பா’ எழுத்தில் கைக்குட்டை பரிசு
ஈழத்தில் இருந்த அகதியாக தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வந்து தற்போது வெற்றி நிச்சயம் மூலம் நல்ல வேலையில் உள்ள சாரா பேசும்போது, “முதலில் ரைஸ் மில்லில் ஒரு சாதாரண இடத்தில் தான் எங்களை தங்க வைத்திருந்தார்கள். இப்போது, முதல்வர் இலங்கை அகதிகளுக்காக நல்ல வீடு கட்டி கொடுத்துள்ளார். அதில் தான் நாங்கள் வசிக்கிறோம். இங்கு வந்து படித்து நான் தற்போது பேஷன் டிசைனராக உள்ளேன். தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி” என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, “முதல்வர் அப்பாவுக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்… தரவா?’’ என்று கேட்டார். முதல்வரும் சரி என்றவுடன், மேடையில் இருந்து இறங்கி, ‘அப்பா’ என்று எம்பிராய்ட் செய்த கைக்குட்டையை கொடுத்தார். அதை முதல்வர் மிகவும் ஆசையுடன் பெற்றுக்கொண்டு அவரை வாழ்த்தினார்.

* ‘நான் ஜெயிச்சிட்டேன் முருகா…’
திருப்பரங்குன்றம் சுகன்யா பேசும்போது, “தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் படித்து வெற்றி பெற்றுள்ளேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி ‘நான் ஜெயிச்சிட்டேன் முருகா’ என்று சத்தம்போட்டு சொல்லிவிட்டுதான் வந்தேன்” என்றார். அப்போது அரங்கத்தில் இருந்த முதல்வர் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சுகோட்டை கிராமத்தில் இருந்து வந்த ஜனனி பேசும்போது, “3 பெண்கள் எனது பெற்றோருக்கு. நான், வெற்றி நிச்சயம் மூலம் தேர்வாகி வேலைபார்த்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். ஓட்டை வீட்டில்தான் இருந்தோம். 3 பேரும் நல்லா படித்தோம். வெற்றி நிச்சயம் மூலம் எம்பிராய்ட் நிறுவனம் ஹாஸ்டல் இலவசத்துடன் ஒரு வேலை கிடைத்தது. இப்போது புதிதாக வீடு கட்டி சந்தோஷமாக இருக்கிறோம். முதல்வர் சாருக்கு நன்றி” என்றார்.

* சாதித்த பெண்களின் நெகிழ்ச்சி
வெல்லும் தமிழ்ப் பெண்களின் சாதனை என்ற பெயரில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை 2வது கட்ட தொடக்க விழா, நேற்று மாலை கிராமிய கலை நிகழச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, காவல்துறை பெண் கமாண்டோக்களின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அவர்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு ஏ.கே.47, பிஸ்டல் துப்பாக்கிகளை பிரித்து மீண்டும் மாட்டி திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் நடிகை தேவயானி பேசும்போது, ‘‘நான் பிறந்தது மும்பையாக இருந்தாலும், எனக்கு எல்லாமே கொடுத்தது தமிழ்நாடு தான்’’ என்றார். இதை தெடர்ந்து நகர மன்ற பெண் உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பெண் ராணுவ மேஜர் டெலோஸ் புளோரா பேசும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, பின்னர் ராணுவ பள்ளியில் படித்து இன்று ராணுவ மேஜராக உயர்ந்துள்ளேன். 1982 டிசம்பர் 20ம் தேதி டெல்லி போய் கடும் குளிரில் கஷ்டப்பட்டு படித்து, 2023ல் மேஜர் ஜெனரலாக பணியில் சேர்ந்தேன். அப்போது நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்மூலம் நான் வெளிச்சத்துக்கு வந்தேன். 39 வருஷம் ராணுவத்தில் பணியாற்றியபோது 18 இடங்களுக்கு பணிமாறுதல் ஆகி, இந்த நிலைமைக்கு வந்தேன். இதற்கு காரணம் எனது உழைப்பு, தன்னம்பிக்கை, சவால்தான். முதல்வர் நிறைய திட்டங்களை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு பெண்களும் வீட்டில் இருந்து வெளியே வந்து என்னைபோல் உயர வேண்டும்’’ என்றார்.

பெண் இஸ்ரோ விஞ்ஞானி இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி பேசும்போது, ‘‘ஆண், பெண் பேதம் இன்றி தன்னம்பிக்கை கொடுத்தது பெற்றோர்தான். எனது பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் அரசு பள்ளிதான். கற்றல் சுதந்திரத்தை சிறப்பாக கையாண்டால் சிறப்பாக வளர முடியும். கடின உழைப்பு என்றைக்கும் தோற்காது. நான் படித்த பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டி கொடுக்க முடிந்தது. அதற்கு முதல்வர் மிகவும் உதவியாக இருந்தார்’’ என்றார். இவர் தற்போது இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பிளாஸ்க் சர்ஜரி எச்ஓடி டாக்டர் ராஜேஷ்வரி பேசும்போது, ‘‘கடந்த செப்டம்பர் 27ம் தேதி பீகாரை சேர்ந்த இளைஞர் ரயில் விபத்தில் இரண்டு கைகளும் அடிபட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அழைத்து வந்தனர். அவரது இரண்டு கைகளையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், நாங்கள் பெண் மருத்துவ குழுவாக இணைந்து இடது கையை வலது கையுடன் இணைத்து ‘கிராஸ் கண்ட்’ சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளோம்’’ என்றார்.

* சைகையில் பேசிய மாற்றுத்திறனாளி மாணவி
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாய்பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி இளம்பெண் எழிலரசி சைகையில் பேசினார். அது மேடையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. “எனது அப்பாவுடன் 8 பேர் பிறந்தனர். அனைவரும் வாய்பேச, காது கேட்காதவர்கள்தான். பாட்டியும் அப்படித்தான். எனது அண்ணனும் அப்படித்தான். பி.காம் படித்து 5 வருஷம் வேலை இல்லாமல் இருந்தேன். எப்படியாவது சென்னைக்கு சென்று வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராடினேன். கல்லூரி படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கியது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்க ஊரில் இருப்பவர்கள் என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆடு, மாடு மேய்க்கத்தான் போக வேண்டும் என்று பேசினர். இதையடுத்து முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் ஒரு கம்பெனியில் நிரந்தர பணியில் சேர்ந்து, எனது குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார்.

* நான் படிக்கும்போது நான் முதல்வன் இல்லையே-நடிகை ரோகிணி ஆதங்கம்
நடிகை ரோகிணி பேசும்போது கூறியதாவது: இங்குள்ள பெண்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது எப்படியெல்லாம் வெற்றி பெற்றோம் என்பதை கூறும்போது அதை புரிந்துகொள்ள முடிந்தது. பெண்கள் தொடர்ந்து தங்களது குடும்பத்துக்காக பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்களுக்காக யார் என்ன செய்வார்கள் என்பதுதான் கேள்விக்குறி. நமது முதல்வர் ஒவ்வாரு பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார். பெண்களுக்காக ஒரு உரிமையை வழங்கியுள்ள செயலை பாராட்டாமல் இருக்க முடியாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் முதல்வர், துணை முதல்வர் இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் படிக்கும்போது நான் முதல்வன் திட்டம் இருந்திருந்தால் நானும் எனது படிப்பை தொடர்ந்து இருப்பேன். இவ்வாறு நடிகை ரோகிணி கூறினார்.

* ‘சாதனையின் பக்கம் நில்லுங்கள்’
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “தற்போதுள்ள இளம்பெண்கள் எதை பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள். சாதனை பக்கம் நில்லுங்கள். திராவிட மாடல் வேர்களை புரிந்து கொண்டால் அரசுக்கு எவ்வளவு துணையாக நிற்க வேண்டும் என்பது தெரியும்” என்று இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Vellum Tamil Women ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுப...