- உச்சிப்பிள்ளையார் கோவில்
- திருப்பரங்குன்றம்
- மதுரை
- தமிழ்நாடு அரசு
- திருப்பரங்குன்றம் மலை
- மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான் என ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். மதுரை அருகே திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலின் செயல் அலுவலர், மதுரை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனு உள்ளிட்ட 26 மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மதுரை கலெக்டர் தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பழமையானது. தனி நீதிபதி பொதுநல வழக்கைப் போல உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தில் தர்கா உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமான நடைமுறையே நடப்பாண்டிலும் பின்பற்றப்பட்டது. மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் தீபத்தூண் உள்ளதா என்பதே அடிப்படை கேள்வி. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மண்டபத்தில் தான் தீபம் ஏற்றப்படும். இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது.
73 ஆண்டாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபமண்டபத்தில் தான் ஏற்றப்படுகிறது. எந்த பிரச்னையும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே கல் தான். அது தீபத்தூண் அல்ல. முந்தைய தீர்ப்புகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. 1994ல் தான் பிரச்னை ஏற்பட்டது. இருமுறை மதப்பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்ேதாடு மனு செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் கூடிய மனுக்கள் கடந்த 2014ல் தாக்கலானபோது, சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டுமென்று கூறித்தான் இரு நீதிபதி அமர்வு அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் 226 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற உரிமை கோர முடியாது. அதேபோல் கோயிலின் சொத்து உரிமை பாதுகாக்க வேண்டும் என தனி நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு குறித்து கோயில் தரப்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையும் தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. நீதிபதி குறிப்பிட்ட அந்த தூண் பழங்காலமாக தீபம் ஏற்றப்பட்டதா என்பதை உறுதி செய்ய எந்த ஆவணங்களும் இல்லை. அவ்வாறு உள்ள நிலையில் தனி நீதிபதி எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க இயலும்? எனவே தர்கா அருகில் உள்ள தூண் தீபம் ஏற்றும் தூண் இல்லை. அது சாதாரண நில அளவைகள் மட்டுமே. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.
கோயில் செயல் அலுவலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ‘‘மனுதாரர் தீபம் ஏற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கு 175 ஆண்டுகளாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த கல் சாதாரண கிரானைட் கல் மட்டுமே’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அது உண்மையாகவே தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்டதா அல்லது நில அளவை கல்லா என்பதை நீங்கள் எப்படி உறுதி செய்தீர்கள்’’ என்றனர்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ‘‘மலையை ஆய்வு செய்த அதிகாரிகள், அது சாதாரண நில அளவை கல் தான் என குறிப்பிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. திடீரென இந்த தூண் எப்படி வந்தது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘மலை உச்சியில் யாரும் தீபத்தூணை தூக்கி எறிந்திருக்க மாட்டார்கள் அல்லவா? அதை யார் கட்டியது? இந்த வழக்கில் நிரந்த தீர்வு காண்பது அவசியம். தீபம் ஏற்றுவது அனைவருக்கும் தெளிவாக தெரிய வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஏன் செய்யக் கூடாது’’ என்றனர். கோயில் தரப்பில், ‘‘மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் கிடையாது. அங்கிருப்பது 8 அடி உயர தூண் தான்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் தரப்பு வாதங்கள் முடிந்துள்ளது.
மீதமுள்ள மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தங்கள் வாதங்களை வரும் 15ம் தேதி எடுத்து வைக்கலாம்’’ என்றனர். அப்போது சில வழக்கறிஞர்கள், ‘‘இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர். அதற்கு நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. டிச. 15ம் தேதியும் வாதங்கள் தொடரும். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகே இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ எனக் கூறி விசாரணையை டிச. 15க்கு தள்ளி வைத்தனர்.
