×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 7ம் நாள் அண்ணாமலையார் கோயில் மகா தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்றுகாலை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 5 தேர்கள் மாட வீதிகளில் பவனி நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர். தீபத்திருவிழாவின் 6ம் நாளான நேற்றிரவு வெள்ளித்தேரோட்டம் நடந்தது. வெள்ளி விமானங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளித்தேரில் அண்ணாமலையார் பிரியாவிடை, இந்திர விமானத்தில் உண்ணாமுலை அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர். அப்போது கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் 7ம் நாளான இன்று காலை விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2வதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர், 3வதாக பெரிய தேர் எனப்படும் அண்ணாமலையார் தேர், 4வதாக உண்ணாமுலையம்மன் தேர், 5வதாக சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை புறப்பட்டு மாடவீதியில் பவனி வரும். இதில் ஒரு தேர் மாடவீதியில் பவனி வந்து நிலையை அடைந்தவுடன் மற்றொரு தேர் புறப்படும்.

அதன்படி இன்று காலை 7.10 மணியளவில் முதலாவதாக விநாயகர் தேர் புறப்பட்டது. இதில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர் பவனி வந்தது.அதனை தொடர்ந்து பெரிய தேர் எனப்படும் மகா ரதத்தில் அண்ணாமலையார் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர்.

ஏராளமான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்றிரவு உண்ணாமுலையம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். இந்த தேரை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள். அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் வீதி உலா வரும். இன்று நடந்த பஞ்சமூர்த்திகள் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* போலீஸ் கெடுபிடி
திருவண்ணாமலையில் இன்றுகாலை தொடங்கிய தேரோட்டத்தில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது. மாடவீதியில் இருசக்கர வாகனங்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் மாடவீதிகளை இணைக்கும், இணைப்பு சாலையிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து தடை செய்ததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல் குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், திருவண்ணாமலையில் கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை உட்கார வைத்து மாடவீதியில் தோளில் சுமந்து சுற்றி வருவது மரபாகும். ஆனால் இன்று கரும்பு தொட்டில் கட்டி வந்த பக்தர்களை மாடவீதியில் போலீசார் அனுமதிக்காமல் வேறு வழியாக திருப்பிவிட்டனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Annamalaiyar Temple ,Maha Therottam ,Tiruvannamalai Deepathi festival ,Tiruvannamalai ,Panchamurthygal Therottam ,Vinayagar chariot ,Mada ,Annamalaiyar ,Temple… ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...