×

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 38 மாவட்ட கள ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் களஆய்வு மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ.அருண் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் – 38 மாவட்ட கள ஆய்வு அறிக்கை 2025” சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் ஆகியவற்றிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்தும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான அரசின் கல்வி தொடர்பான சலுகைகள் பெறுவது குறித்தும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் பணி நியமனங்கள் குறித்தும், சமண மற்றும் பவுத்த சிறுபான்மை மக்களின் நலனுக்கான உதவும் சங்கங்கள் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், ஆணைய உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் சரவணவேல் ராஜ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu State Minorities Commission ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,So.Jo.Arun ,M.K.Stalin. ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...