சென்னை: கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ம.பி.யில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரை செய்தனர். அதன்படி ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து,மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோல்ட்ரிப் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தங்களுக்கும் குறிப்பிட்ட மருந்து நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனால், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் அழகு சாதன பொருட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி செய்யப்படுவது இல்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய விசாரணை நடத்தாமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
