சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 2023-24ல் 26.88 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு நிதியாண்டில் 31.19 லட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவிகித வளர்ச்சியை தொட்டிருக்கிறோம்.
2021-22ல் 15.91 சதவிகிதமாகவும், 2022-23ல் 14.47 சதவீதமாகவும், 2023-24ல் 13.34 சதவீதமாகவும் தொடர்ச்சியாக இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு, 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியில் உற்பத்தித்துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது.
இந்த நான்கு ஆண்டுகளில் ஜிஎஸ்டிபியின் வளர்ச்சி, உற்பத்தித் துறையை பொறுத்தமட்டில் 1.46 லட்சம் கோடியாக இருந்தது. இது இரண்டு மடங்காக பெருகி இருக்கிறது. மகாராஷ்டிராவை விட, தமிழ்நாடு உற்பத்தித் துறையில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.27.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலைமை வந்திருக்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சியில் கட்டுமான துறைக்கு முக்கிய பங்கு உண்டு. 2023-24ல் 15.93 சதவிகிதமும், 2024-25ல் 11 சதவிகிதமும் அதற்கான பங்களிப்பை தந்திருக்கிறது.
சேவைத் துறை 53% பங்களிப்பை செலுத்தி, 2024-25ல் 11.3 சதவீத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது. முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 லட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம். 2021-22ல், 1.86 பில்லியன் டாலராக இருந்தது 2022-23ம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24ம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25ம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருட்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
உயர் கல்வியில் அகில இந்திய சராசரி 28.4 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு இன்றைக்கு 47 சதவிகிதம் வந்திருக்கிறது. நம்முடைய நிதிப் பற்றாக்குறை என்பது 3 சதவிகிதத்திற்குள்ளாகவே வரக்கூடிய அளவில் 2025-26ம் நிதியாண்டில் கட்டுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை, ஒட்டுமொத்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, முதலமைச்சரின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
* 3 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம்
2021-22ம் ஆண்டில் 15.91 சதவிகிதமாகவும், 2022-23ம் ஆண்டில் 14.47 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 13.34 சதவீதமாகவும் தொடர்ச்சியாக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.
