குளச்சல்: குமரி கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை காரணமாக குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. குளச்சல் கடல் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000 க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வரும் 29 ம் தேதிவரை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27ம் தேதிவரை மன்னர் வளைகுடா, கன்னியாகுமரி பகுதியில் மணிக்கு 55 கி.மீ.வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அவசரமாக பாதியிலேயே கரை திரும்பின. மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகளும் மீன்களை இறக்கி விட்டு மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் முட்டம் கடலில் மீன் பிடிக்க சென்ற சுமார் 140 விசைப்படகுகளில் பெரும்பான்மையான படகுகள் கரை திரும்பி தனியார் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. கரை திரும்பாத படகுகள் இன்று மாலைக்குள் கரை திரும்பி விடும் என விசைப்படகினர் தெரிவித்தனர். ஆனால் அருகில் மீன் பிடிக்க செல்லும் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் அதிகமாக சாளை மீன்களே கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர்.
