×

மேகதாது பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளும் கடந்த மாதம் 13ம் தேதி விசாரணைக்கு வந்தன. இதில், மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், 2018 பிப்ரவரி 16ம் தேதி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி, மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, இரு மாநிலங்களுக்கும் பிரச்னையை மேலும் பெரிதாக்கும் என்பதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு வாதிட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணை கடந்த மாதம் 22ம் தேதி வெளிவந்தது. இதில், மேகதாது அணை தொடக்க நிலையில்தான் உள்ளது, இத்திட்டம் உச்ச நீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அதன் வாதங்களை மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன்வைக்கவும் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பில் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தாங்களே முடிவு செய்யலாம் என தெரிவித்திருப்பது, 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பின் பத்தி 447ல், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீர், ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளதற்கு முரணாக உள்ளது.

ஆகையால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலேசானைபடியும், முதல்வர் உத்தரவின்படியும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த மாதம் 13ம் தேதி ஆணையை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய நீர்வள குழுமத்திடமும் மேகதாது அணை எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக் கும் என்பதையும், உச்ச நீதிமன்ற ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான மனு கடந்த 9ம்தேதி அளித்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

Tags : Tamil Nadu government ,Karnataka government ,Supreme Court ,Mekedadu ,Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,Cauvery river ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து