×

சபரிமலையில் தங்கம் திருட்டு கேரள முன்னாள் அமைச்சர் சிக்குகிறார்: விரைவில் விசாரிக்க எஸ்ஐடி முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் இதுவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உயரதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு தேவசம் போர்டு தலைவராக இருந்தவரும், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏவுமான பத்மகுமார் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றபோது அவை அனைத்தும் செம்புத் தகடுகள் என்று ஆவணங்களில் இவர்தான் திருத்தியுள்ளார்.

தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கம் திருட்டு குறித்து அப்போதைய கூட்டுறவு, சுற்றுலா மற்றும் தேவசம் போர்டு அமைச்சரும், தற்போதைய சிபிஎம் எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் தெரியும் என்று பத்மகுமார் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடகம்பள்ளி சுரேந்திரனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. விரைவில் இவரிடம் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர்.இது கேரள அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kerala ,minister ,Sabarimala ,SIT ,Thiruvananthapuram ,Travancore Devaswom Board ,Padmakumar ,Devaswom Board ,CPM ,MLA… ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி