×

கொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு நடுரோட்டில் செல்போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை: டாக்டர்களுக்கு குவியும் பாராட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள உதயம்பேரூர் என்ற இடத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வினு(40) என்பவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவருக்கு அந்த வழியாக காரில் வந்த கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இதய அறுவை சிகிச்சை நிபுணரான மனூப் முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.

அப்போது கொச்சி இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் தம்பதிகளான தாமஸ் பீட்டர் மற்றும் திதியா ஆகியோர் அந்த வழியாக வந்தனர். இவர்களும் உடனடியாக வினுவை பரிசோதித்தனர். நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாலும் விபத்தின்போது நுரையீரலுக்குள் மண் புகுந்ததாலும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கியது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உடல்நிலை மோசமாகும் சூழல் உருவானது.

இதைத் தொடர்ந்து 3 டாக்டர்களும் சேர்ந்து வினுவுக்கு ரோட்டில் செல்போன் வெளிச்சத்தில், பிளேடு மற்றும் சிறிய உபகரணங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை தொடங்கினர். கழுத்தில் சிறிய துளை போட்டு ஒரு ஸ்ட்ராவை பயன்படுத்தி வினுவுக்கு மூச்சு விட வசதி ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், ஆம்புலன்சில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினுவுக்கு தற்போது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர். விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு நடுரோட்டில் அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றிய 3 டாக்டர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Vinu ,Udayamberur ,Kerala ,Kottayam Government Medical College Hospital ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி