கவுகாத்தி: பீகார், நேபாளிகளுக்கு எதிராக அசாமில் வெடித்த வன்முறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இன்டர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் வசித்து வரும் பீகாரி மற்றும் நேபாளக் குடும்பங்களை மேய்ச்சல் நிலங்களில் இருந்து வெளியேற்றக் கோரி கார்பி ஆங்லாங், மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள்.
கெரோனி பகுதியில் புதிய வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஏராளமான பொதுமக்களும், ஐபிஎஸ் அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர். திங்கட்கிழமை மதியம் அப்பகுதியில் தொடங்கிய வன்முறை, நேற்று மாலை மீண்டும் தீவிரமடைந்தது. சந்தைப் பகுதியில் கடைகள் எரிக்கப்பட்டன.
போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது. இருப்பினும் மக்கள் போலீசாரையும் தாக்கினர். இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 38 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை அசாம் டிஜிபி ஹர்மீத் சிங் உறுதிப்படுத்தினார். வன்முறை நடந்த பகுதியை நேற்று அமைச்சர் ரனோஜ் பெகு பார்வையிட்டார். அவர் சென்ற பிறகு மீண்டும் வன்முறை வெடித்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
